சென்னை: தாங்கள் தங்கியிருந்த அரசு பங்களாக்களைப் பராமரிக்க கோடிகளில் செலவு செய்துள்ளனர் கடந்த ஆட்சியாளர்களான எடப்பாடி, ஓபிஎஸ், அமைச்சர்கள் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்பது தகவல் பெறும் உரிமை சட்டம் (ஆர்டிஐ) மூலம் தெரிய வந்துள்ளது. இது பொது மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
மக்கள் சேவைக்காக பதவிக்கு வரும் அரசியல்வாதிகள், அதிகாரிகள், மக்கள் பணத்தை எப்படியெல்லாம் தண்ணீராக செலவழிக்கிறார்கள் என்ற தகவல் ஆர்டிஐ மூலம் வெளியாகி உள்ளது. இது கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. அரசியல்வாகிதளும், அதிகாரிகளும் மக்களை ஏமாற்றி தங்களை வளமாக்கிக்கொண்டுள்ளனர் என்பது இதன்மூலம தெரிய வந்துள்ளது.
கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன் என்பவர், முன்னாள் முதல்வர், துணைமுதல்வர், அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகள், உயர் அதிகாரிகள் வசிக்கும் குடியிருப்புகளில் செலவழிக்கப்பட்ட தொகை குறித்து ஆர்டிஐ மூலம் தகவல் பெற்றுள்ளார். அதன்படி, கடந்த அ.தி.மு.க ஆட்சியில், தன்னை விவசாயி என்று பீற்றிக்கொண்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தான் வசித்து வந்த கிரின்வேஸ் ரோடு அரசு இல்லத்தை பராமரிக்க மட்டுமே ஆண்டுகளில் ரூ.1.7 கோடி செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதுபோல துணைமுதல்வர் ஓபிஎஸ், அ.தி.மு.க அமைச்சர்கள் தங்கிய அனைத்து அரசு பங்களாக்களுக்கும் சேர்த்து கடந்த 10 ஆண்டுகளில் ரூ.28.47 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு வீட்டுக்கு கடந்த 4 ஆண்டுகளில் ரூ.1.7 கோடி செலவு செய்யப்பட்டு உள்ளது.
முன்னாள் துணைமுதல்வர் ஓபிஎஸ் வீட்டுக்கு மட்டும் ரூ.84.5 லட்சம் பராமரிப்புச் செலவு செய்யப்பட்டுள்ளது.
சபாநாயகராக இருந்த தனபால் வீட்டுக்கு ரூ.43.37 லட்சம்,
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டுக்கு ரூ.55.37 லட்சம்,
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டுக்கு ரூ.38.61 லட்சம்,
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டுக்கு ரூ.31.23 லட்சம்,
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வீட்டுக்கு ரூ.30.45,
முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டுக்கு ரூ.27.88 லட்சம்
முன்னாள் அமைச்சர் ஜி.பாஸ்கரன் – ரூ.10.16 லட்சம்,
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் – 9.86 லட்சம்,
முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் – 8.5 லட்சம்,
முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி – ரூ.5.73 லட்சம்.
அமைச்சர்களின் வீடுகளைவிட, நீதிபதிகளின் அரசு பங்களாக்களுக்கு இன்னும் அதிகம் செலவு செய்யப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
செனனையில் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு 47 அரசு பங்களாக்கள் உள்ளன. இவற்றில் ஒருசிலவற்றைத் தவிர, அனைத்து பங்களாக்களிலும் நீதிபதிகள் தங்கியிருக்கிறார்கள்.
இந்த வீடுகளை பராமரிக்க மட்டும் 10 ஆண்டுகளில் ரூ.30.88 கோடி செலவிடப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த கோவை வழக்கறிஞர் லோகநாதன், ”பொது வாழ்க்கைக்கு வருகிற எல்லோருமே தாங்கள் எளிமையானவர்கள் என்று காட்டிக்கொள்ளத்தான் விரும்புகிறார்கள். அதை நிரூபிக்க, சேற்றிலெல்லாம்கூட இறங்குவார்கள். ஆனால், உண்மையில் அவர்களின் வாழ்வியல் முறை அதற்கு எதிராகத்தான் இருக்கிறது. மக்களின் பணத்தை வாரியிறைத்து தங்களை சொகுசுபடுத்திக்கொள்கிறார்கள்.
மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள் அதிகாரிகளின் உண்மை முகத்தை அறிய வேண்டும் என்றுதான் அமைச்சர்கள், நீதிபதிகள் தங்கியுள்ள அரசு பங்களா வீடுகளின் பராமரிப்புத் தொகை விவரங்களை பொதுப்பணித் துறையிடம் வாங்கினேன் என்று தெரிவித்தவர், நீதித்துறை யினருக்கு செலவழிக்கப்பட்டுள்ள தொகையை பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது என்றும், தங்களுக்கு சாதகமான தீர்ப்புகளை பெறவே அரசு, நீதிபதிகளை ‘மகிழ்ச்சியாக’ வைத்துக்கொள்ள இப்படி கண்மூடித்தனமாகச் செலவு செய்கிறார்கள், இதுவும் ஒரு மறைமுக லஞ்சம் என்றும், வேலியே பயிரை மேய்ந்த கதையாக நீதித்துறையில் இருப்பவர்களே இதை ஆதரிப்பது எந்த வகையில் நியாயம்?
இந்தப் பராமரிப்புச் செலவில் தண்ணீர், மின்சாரக் கட்டணங்கள் அடங்காது. அவை தனி. இவை பெயின்ட்டிங், புனரமைப்பு போன்ற வீடுகளைப் பராமரிக்க ஆன செலவுகள் மட்டும்தான். இவை எல்லாமே மக்கள் வரிப்பணம். இனியாவது உயர் பொறுப்பில் இருப்பவர்கள் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும்” என்று ஆதங்கப்பட்டார்.