சென்னை:
அரசு பங்களாவை காலி செய்ய சசிகலா தரப்பு ஓ. பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சராக பதவியேற்க சசிகலா விருப்பப்பட்டதால், முதலமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யும்படி சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் மிரட்டி கையெழுத்து வாங்கியது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
அதையடுத்து பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என இரண்டு அணிகளாக அதிமுக பிரிந்தது. கடந்த 18ம் தேதி சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை தீர்மானத்தில் சசிகலா தரப்பு எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பதவியேற்றார்.
இதையடுத்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்ச்செல்வம், தான் வசித்துவரும் வீட்டை காலி செய்ய 6 மாதம் கால அவகாசம் கேட்டிருந்ததாகவும் அதற்கு அரசுத்தரப்பிலிருந்து எந்தப் பதிலும் வரவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
அரசிடமிருந்து எந்தப்பதிலும் வராததால் ஓ.பன்னீர்ச்செல்வம் தங்கியிருக்கும் அரசுவீட்டை காலி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஓ.பன்னீர்ச்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துவரும் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜனுக்கு எம்எல்ஏ விடுதியில் அறை ஒதுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
தனக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக தினமும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்து செல்வதால் அதற்கு ஏற்றார் போல சென்னையில் வாடகை வீட்டை ஓபிஎஸ் தேடி வருகிறார்.