ஊரடங்கை அமல்படுத்துவதில் எடப்பாடி அரசு தோல்வி… தேர்தல் பயமா…?

Must read

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மக்கள் வீட்டை விட்டு வெளியேறுவதை தடுக்க அனைத்து மாநிலங்களும் தீவிரமான நடைமுறைகளை எடுத்து வருகிறது.

ஆனால், தமிழக அரசோ, வெளியூர்களுக்கு செல்ல விரும்பும் மக்களுக்கு வார்டுகள் தோறும், மாவட்டங்கள் தோறும் அனுமதி வழங்கி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவும் 3வது ஸ்டேஜில், தமிழகஅரசு பொதுமக்கள் வெளியே செல்ல அனுமதி வழங்கி வருவது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுமட்டுமின்றி, அரசின்  ஊரடங்கு உத்தரவை மீறி வீட்டை விட்டு வெளியேறி செல்லும் வாகன ஓட்டிகளிடமும், மார்க்கெட்டுகளில் கூடும் மக்களிடமும்  கடுமையை காட்ட வேண்டிய காவல்துறையினர், பலரிடம் கெஞ்சுவதும், புள்ளிங்கோக்களை பல்டி அடிக்க வைத்தும், தோப்புக்கரணம் போட வைத்தும் காமெடி செய்து வருகின்றனர்.

இதுபோன்ற நடவடிக்கைகள் வைரஸ் தொற்று பரவலை எப்படி தடுக்கும் என்று மருத்துவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நாங்கள் இரவு பகல் பாராது பணியாற்றி வருகிறோம், ஆனால், அரசுகளோ, அவர்களின் எதிர்கால நலனில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர் என்று குற்றம் சாட்டுகின்றனர்.

மக்களின் நலன் கருதி, மத்தியஅரசால் பிறப்பிக்கப்பட்ட   ஊரடங்கு உத்தரவை  மாநில அரசே மதிக்காமல் நடந்துகொள்வது நியாயயமா? என  சமூக ஆர்வலர்களிள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

ஊரடங்கை வாபஸ் பெறுங்கள்…

வைரஸ் தொற்று பரவலை தடுக்க அரசு மேற்கொண்டு வரும்  நடவடிக்கைகளை சரிவர கடைபிடிக்காத காரணத்தால்,  அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பேர் கொரோனா பாதிப்பால்  கொத்துகொத்தாக மரணித்து வருகிறார்கள் என்பதை நாம் அனைவரும் அறிந்து வருகிறோம்.

இன்று காலை (ஏப்ரல் 1ந்தேதி) சென்னையில் காணப்பட்ட வாகன நெரிசல்

அப்படி இருக்கும்போது, மக்கள் நெருக்கம் மிகுந்த இந்தியாவில், அதுபோன்ற ஒரு அசம்பாவித  நிகழ்வு ஏற்பட்டு விடக்கூடாது என்ற காரணத்தினாலேயே, 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது.

இந்த ஊரடங்கை தெலுங்கானா  உள்பட சில மாநிலங்கள் கடுமையாக அமல்படுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு வெறும் கண்துடைப்பாகவே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தமிழக மக்கள் எப்போதும்போல, ஜாலியாக ஊர் சுற்றி வருகின்றனர்.. பல அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அறிவித்துள்ளதால், சென்னை போன்ற மாநகரங்களில் வசிக்கும் ஏராளமானோர், எந்தவித பாதுகாப்பு கவசமுமின்றி, பொழுதுபோக்காக வாகனங்களில் ஊரைச் சுற்றி வருகின்றனர்.

பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்திலேயே உணவுப்பொருட்கள், பால் போன்ற சில வகையான போக்குவரத்துக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது.

ஆனால், நமது மக்களோ,  ஊரடங்கை கடைபிடிக்காமல்   அத்தியாவசியத் தேவையின்றி வெளியே சுற்றி வருகிறார்கள்… வீட்டை விட்டு வெளியே  வருவதை தவிருங்கள் என்று மத்திய, மாநில அரசுகள் பொதுமக்கள் காலில் விழாத குறையாக வேண்டுகோள் விடுத்து வருகிறது.

ஆனால் பலர் அரசின் உத்தரவை மதிக்காமலேயே செயல்பட்டு வருகின்றனர். இது உதாரணம் தினசரி காலை கோயம்பேடு மார்க்கெட்டில் கூடும் மக்கள் கூட்டம், சென்னை வானகரம், சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தையில் கூடும் மக்கள் கூட்டம் மற்றும், ஒவ்வொரு பகுதிகளில் உள்ள சாலையோர மார்க்கெட்டுகளில் கூடும் கூட்டமே சாட்சி.

இன்று (ஏப்ரல் 1ந்தேதி) சென்னையில் காணப்பட்டவாகன நெரிசல்

இதுபோன்ற எந்தவொரு சந்தைகளிலும், கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கைகளோ, சமூக விலகளோ கடைபிடிக்கப்படுவதில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், அந்த பகுதியில் பணியாற்றும் காவலர்கள் அறிவுறுத்தினாலும் பலர் அதை கண்டுகொள்ளாத நிலையே உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இன்றுமுதல் 3வது கட்டத்துக்கு சென்றுள்ள நிலையில், அதன் தாக்கம் அடுத்தடுத்த நாட்களில் வீரியமாக இருக்கும் என மருத்துவ அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர். மக்கள் முன்னெச்சரிக்கையாக சமூக விலகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள் என்று அறிவுறுத்தி வருகின்றனர்.

ஆனால், தமிழக மக்களோ, கொரோனா வைரஸ் தொற்று குறித்து எந்தவித அச்சமும் இல்லாமல் ஊர் சுற்றி வருகின்றனர்.  இன்று (1/04/2020) காலை சென்னை கோயம்பேடு அருகே உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில் காணப்பட்ட வாகன நெரிசல் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

கார் போன்ற நான்கு சக்கர வாகனங்களும், ஏராளமானோர் இரு சக்கர வாகனங்களிலும், சாதாரண அலுவலக நாட்கள் போல் சென்றுவந்த காட்சி பதைபதைப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஊரடங்கை அமல்படுத்தப்பட வேண்டிய காவல்துறையினரோ, கைகட்டி வேடிக்கை பார்க்கிறது..

நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், அதிலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளதோ என்ற தோற்றத்தை உருவாக்கி உள்ளது.

தமிழக மக்களின் உயிரோடு விளையாடுவதில் தமிழகஅரசுக்கு ஏன் இந்த ஆர்வம்,  ஏன் இந்த பொறுப்பின்மை, தமிழக காவல்துறையினரின் கைகளை கட்டிப்போட்டுள்ளது யார்?

அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சிகளை போல, தமிழக அரசும், தங்களின்  அரசியல் எதிர்காலத்திற்காக மக்களின் உயிரோடு விளையாடி வருகிறதா?

நேற்றுமுதல் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது என்பதை நாம் அனைவரும் கண்கூடாக கண்டு வருகிறோம். தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வரும் தகவல்கள் அதிர்சியை ஏற்படுத்தி வருகிறது.

நோயின் தீவிரம் தெரியாமல் மக்கள் வெளியே நடமாடுவதாகவும், மக்கள் ஒத்துழைப்பு அளித்தால்தான் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புலம்பி வருகிறார்.

இதுபோன்ற சூழலில், மக்கள் வீட்டை விட்டு வெளியேறுவதை தடுத்து, ஊரடங்கை தீவிரப்படுத்த வேண்டிய அரசு, மக்களை சாதாரண நாட்களை போல நடமாட விட்டிருப்பது ஏனோ? நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டிய மாநில முதல்வரே இவ்வாறு பிதற்றுவது பரிதாபமாக உள்ளது.

ஊரடங்கு உத்தரவை முழுமையாக அமல்படுத்தி மக்களை கொரோனா நோய் தாக்கத்தில் இருந்து காப்பாற்ற தமிழக அரசு முன்வர வேண்டுமே அன்றி, தங்களது அரசியல் எதிர்காலத்திற்காக தமிழக மக்களின் உயிரோடு விளையாடாதீர்கள்.

வாக்கு வங்கியை கவனத்தில் கொண்டு, மக்களிடையே கொரோனா தொற்று பரவலை தடுப்பதில் தமிழக அரசு தடுமாற வேண்டாம். 

சட்டத்தை முழுமையாக அமல்படுத்தி மக்களை காப்பாற்றுவதற்கு தேவையான  முயற்சியை தீவிரப்படுத்துங்கள்.. 

இல்லையேல் தமிழக வரலாற்றில் உங்களின் ஆட்சி ஒரு கரும்புள்ளியாக அமைந்துவிடும்… 

More articles

Latest article