சென்னை: கைது செய்யப்பட்ட நிலையில் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் உண்ணாவிரதத்தை தொடரும் எடப்பாடியை சந்திக்க தமாக தலைவர் ஜிகே வாசனுக்கு காவல்துறை அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, ஜி.கே.வாசன் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சபாநாயகர் அப்பாவுவின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை என குற்றம்சாட்டி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக எம்எல்ஏக்களுடன் இன்று வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். இதற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, அவர்களை கைது செய்த காவல்துறையினர் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் அடைத்து வைத்துள்ளனர். அங்கும், இபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
‘இதுகுறித்து தகவல் அறிந்த அதிமுகவினர் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் அடைக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க, கூட்டணி கட்சி தமாக தலைவர் ஜிகே வாசன் வருகை தந்தார். அவர் சந்திக்க காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.
இதனால் காவல்துறையினரின் நடவடிக்கையை கண்டித்து, ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே உள்ள சாலையில், ஜி.கே.வாசன் தனது ஆதரவாளர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.