சென்னை: திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மதுரை நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி அமலாக்கத்துறை மனு அளித்துள்ளது. இதுகுறித்து பதில் அளிக்க லஞ்ச ஒழிப்புகாவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மதுரை நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாத்திகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன்  அமர்வு, மனு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) மற்றும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க  உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2001 முதல் 2006வரையிலான மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில், திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், கால்நடை மற்றும் வீட்டுவசதி வாரிய அமைச்சராகவும் அனிதா ராதாகிருஷ்ணன் இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.

அதோவது அவரது சொத்து மதிப்பு,  2001-ல் ரூ.23.36 லட்சமாக இருந்த சொத்து மதிப்பு, 2006-ல் ரூ.6.86 கோடியாக உயர்ந்தது. இதில் சுமார் ரூ.2 கோடிக்கும் அதிகமான சொத்துக்களுக்கு முறையான கணக்கு இல்லை என லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) 2013-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இதன் அடிப்படையில் அமலாக்கத்துறை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ்  அமலாக்கத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தூத்தக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், அமலாக்கத்துறை உதவி இயக்குநர் நளினி கிருஷ்ணன் , வழக்கை மதுரைக்க மாற்ற உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் (PMLA) வழக்குகளை விசாரிக்க மதுரை முதன்மை அமர்வு நீதிமன்றமே சிறப்பு நீதிமன்றமாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது.   தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த ஊழல் தடுப்புச் சட்ட வழக்கை, மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றினால் மட்டுமே பணமோசடி வழக்கை முறையாகத் தொடர முடியும். கடந்த 2025 டிசம்பர் 11 அன்று, இந்த இடமாற்றக் கோரிக்கையை தூத்துக்குடி நீதிமன்றம் நிராகரித்தது. தங்களுக்கு அதற்கு அதிகாரம் இல்லை என அந்த நீதிமன்றம் கூறியிருந்தது.

இதனை எதிர்த்து அமலாக்கத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டது. இ.டி. தரப்பு வழக்கறிஞர் சித்தார்த்தன் வாதிடுகையில், பணமோசடி தடுப்புச் சட்டம் பிரிவு 44(1)(c)-ன் படி, சம்பந்தப்பட்ட வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்ற முழு அதிகாரம் உள்ளது. தூத்துக்குடி நீதிமன்றத்தின் மறுப்பு சட்டப்பிரிவுகளுக்கு எதிரானது என்று குறிப்பிட்டார்.

இந்த மனுவை வியாழக்கிழமை  நேறறு (மார்ச் 12, 2026) விசாரித்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாத்திகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அடங்கிய அமர்வு, மனு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) மற்றும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும்.

இதுகுறித்து நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

[youtube-feed feed=1]