சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டை வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்கிடையில், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, என்ஐஏ போன்ற மத்திய அமைப்புகளின் சோதனைகளும் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில், இன்று  அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தின்போது தடை செய்யப்பட்ட  குட்கா விற்பனை செய்ய லஞ்சம் பெற்ற வழக்கில் சி.விஜயபாஸ்கர் மீது ஏற்கெனவே சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. மேலும், அமலாக்கத்துறையும் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக,  முன்னாள் சுகாதாரத்துறை  சி.விஜயபாஸ்கரின் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள வீட்டில்  இன்று (வியாழக்கிழமை)  காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.  10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.