சென்னை: இன்று காலை முதல் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, வேலூர், திண்டுக்கல், நாமக்கல், புதுக்கோட்டை உள்பட 30க்கும் மேற்பட்ட மணல்குவாரிகளிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

பல்வேறு முறைகேடு தொடர்பான வழக்குகளில் சிக்கி, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் ஏற்கனவே 3 முறை சோதனைகள் நடத்தப்பட்டு, ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், இன்று 4வது மறையாக, அவருக்கு நெருக்கமான நண்பர்கள், தொழிலதிபர்கள் ரத்தினம், ராமச்சந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் இன்று மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் அண்ணா நகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும், திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.  குறிப்பாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்களான ராமசந்திரன், ரத்தினம் உள்ளிட்டோரின் வீடுகளிலும், அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை அருகே முத்துப்பட்டணத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன்; அவரது உறவினர் மாஜி சர்வேயர் ரத்தினம். இருவரும் மணல் குவாரி ஒப்பந்தங்களில் கொடி கட்டிப் பறந்தவர்கள்.  இவர்கள் ஏற்கனவே அதிமுக ஆட்சியின்போது, இடி ரெய்டில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்திய சேகர் ரெட்டியுடன் நெருக்கமான வர்கள் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே ‘மணல்’ ஆறுமுகசாமி வசம் இருந்த குவாரிகள் ராமச்சந்திரன் மற்றும் ரத்தினம் ஆகிய  இருவரிடமும் கை மாறிய காலம் என்பதால் அங்கு ரெய்டு நடைபெற்று வருகிறது. மேலும், புதுக்கோட்டை பகுதிகளில் உள்ள அவர்களின்  வீடுகள், தொழில் நிறுவனங்கள், மற்றும்   திண்டுக்கல் ரத்தினத்தின் தரணி குழுமத்தின் கீழ் செல்வி டிரான்ஸ்போர்ட், செல்வி சேம்பர், தரணி ரியல் எஸ்டேட், தரணி லேண்டு டெவலப்பர்ஸ், செல்வி மினரல்ஸ் மற்றும் வேதா கிரீன் பவர் பிரைவேட் லிமிடெட் என ஏகப்பட்ட தொழில் நிறுவனங்கள் செயல்பட்டன. அத்தனை இடங்களிலும் அமலாக்கத்துறை  சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாமக்கல் மாவட்டம் செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள மணல் சேமிப்பு கிடங்கில் அமலாக்க துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், ஒருவந்தூர் ஆற்றுப்பகுதியில் இருந்து மணல் எடுத்து குமரிபாளையத்தில் உள்ள அரசு மணல் கிடங்கில் வைத்து ஆன்லைன் மூலம் மணல் விற்பனை செய்யும் இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கொட்டையாம்பட்டி பகுதியில் உள்ள மணல் குவாரியில் சோதனை மற்றும் பிரபல தொழிலதிபர் ராமச்சந்திரனுக்கு தொடர்புடைய இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் உதவியுடன் சோதனை நடக்கிறது.

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப்பட்டு வருவதாகவும், முறையாக பில்கள் போடவில்லை என புகார்கள் எழுந்தவந்தது. இந்த நிலையில் இன்று காலை 6 பேர் கொண்ட அமலாக்கத் துறையினர் திடீரென கந்தனேரி மணல் குவாரிக்கு வந்தனர். மணல் குவாரியில் மணல் அள்ளப்பட்ட இடங்கள், ஊழியர்கள் உள்ளிட்ட வர்களிடம் விசாரணை நடத்தினர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் மணல் அள்ளும் பணியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுமட்டுமின்றி,  சென்னை அண்ணா நகரில் உள்ள ஆடிட்டர் சண்முகராஜ் வீட்டில் தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்
அதேபோல் தேனாம்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் சென்னை முகப்போர் கிழக்கு பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை பொறியாளர் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.

ஒரே நேரத்தில் சென்னையில் உள்ள பல பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது 7 ஆண்டுகளுக்குப் பின்னர் சேகர் ரெட்டி நண்பர்களான,  புதுக்கோட்டை ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம் பெயர்கள் செந்தில் பாலாஜி வழக்கில் அடிபட்டு அமலாக்கத்துறை சோதனையை மீண்டும் எதிர்கொண்டிருக்கிறது.

ஏற்கனவே பண மோசடி வழக்கில் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு இது மேலும் சிக்கலை உருவாக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.