சென்னை: மத்திய அரசின் பரிந்துரையின்பேரில்தான் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது என்றும், பொருளாதார அடிப்படையில் 83% மக்களுக்கு இதனால் பாதிப்பில்லை என்றும் அமைச்சர் கே.என். நேரு விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு இதுவரை இல்லாத அளவுக்கு சொத்துவரி பல மடங்கு உயர்த்தி அறிவித்து உள்ளது. குறைந்த பட்சம் 25 சதவிகிதம் முதல் அதிக பட்சமாக 150 சதவிகிதம் வரை உயர்த்தி உள்ளது. இதனால், பொதுமக்கள் கடுமையாக அதிருப்தி அடைந்துள்ளனர். வரியில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்து, அதை பெருமையாக சொல்லிக்கொண்டு, திடீரென சொத்து வரியை உயர்த்தியது நியாயமில்லை என்று எதிர்க்கட்சிகளும் குற்றம் சொல்கின்றன. அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

இநத நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, மத்திய அரசின் பரிந்துரையின்பேரில்தான் சொத்து வரி உயர்த்தப்பட்டு இருக்கிறது  என்றும் அதிலும் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்காத வகையில்தான் வரி உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளதாக  விளக்கம் அளித்துள்ளார்.

‘மத்திய அரசின் 15 ஆவது நிதி ஆணையம் 2021-22 சொத்துவரியை உயர்த்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது. தூய்மை இந்தியா, அம்ருத் 2.0 ஆகிய திட்டங்களின் கீழ் நிதி பெறுவதற்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சொத்துவரி குறித்த உயர்வை அறிவிப்பது கட்டாயம் என்று கூறியதால்தான் தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு அதிமுக அரசு, குடியிருப்புக் கட்டடங்களுக்கு 50%, குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்கு 100% என வரி உயர்த்தியது. ஆனால், தேர்தல் வந்ததால் அவை நிறுத்தி வைக்கப்பட்டது. அதனால், தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த சொத்துவரி உயர்வில், தமிழகத்தில் உள்ள  83% வீடுகளுக்கு 25% முதல் 50% வரை வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதில் 58% குடியிருப்பு களுக்கு 25% மட்டுமே வரி உயர்த்தப்பட்டுள்ளது. 7% பகுதி மக்களுக்கு மட்டுமே 100% லிருந்து 150% வரி உயர்வு விதிக்கப்பட்டுள்ளது. அதில் 1.47% குடியிருப்புகளுக்கு மட்டுமே 150% வரி விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்காத வகையில்தான் வரி உயர்த்தப்பட்டுள்ளது. பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் சொத்து வரி குறைவாக உள்ளது என்றும், பொருளாதார அடிப்படையில் 83% மக்களுக்கு இதனால் பாதிப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.