சென்னை: தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் நீடித்து வரும், இருவரும் அமர்ந்து பேச வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளதன் எதிரொலியாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்என்.ரவி தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசு இயற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் அனுமதி தராமல் இழுத்தடித்து வருவதால், ஆளுநர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட சட்ட மசோதாக்கள், அரசின் கொள்கை முடிவுகள் உள்ளிட்ட கோப்புகளுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் நீண்ட காலமாக கிடப்பில் போட்டு வைத்துள்ளதாகவும், எனவே ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால வரம்பை நிர்ணயம் செய்யக்கோரியும் ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக முதல்வரை அழைத்துப்பேசி ஆளுநர் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்ததன் எதிரொலியாக ஆளுநர் கிடப்பில் கிடந்த 10 சட்ட மசோதாக்களை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி வைத்தார். அந்த மசோதாக்களை மீண்டும் மறுநிறைவேற்றம் செய்த தமிழக அரசு அவற்றை மீண்டும் இரண்டாவது முறையாக ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால் அந்த மசோதாக்களை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளார். இதையடுத்து,  தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு மீண்டும் (டிசம்பர் 13ந்தேதி) உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது  தமிழ்நாடு அரசு மற்றும் மத்தியஅரசின் வாதங்களை கேட்ட  தலைமை நீதிபதி  சந்திரசூட் கூறியதாவது,

தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பி உள்ள  மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் தமிழக முதல்வருக்கும், ஆளுநருக்கும் இடையிலான இந்த பிரச்சினையில் ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் என ஆளுநர் எதிர் பார்ப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.

இதுபோன்ற விவகாரங்களில்,  இருவருக்குமிடையே பரஸ்பரம் சுமுக உறவு இருந்தால் தான் தீர்வு கிடைக்கும் என்றவர்,  ஆளுநர் தரப்பில் இருந்து சில முன்னேற்றங்களை எதிர்பார்க்கிறோம். எல்லாவற்றையும் நீதிமன்றமே சொல்லிக் கொண்டிருக்க முடியாது. முதல்வரும், ஆளுநரும் சந்தித்துப்பேசி இந்த பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என மீண்டும் அறிவுறுத்துகிறோம் என்றார்.

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,  இந்த விவகாரத்தில் ஆளுநரை சந்தித்துப்பேச தமிழக முதல்வர் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவருக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என்பதால் இதை அட்டர்னி ஜெனரல் கவனத்துக்கு விட்டுவிடுகிறோம் எனக்கூறி விசாரணையை ஜனவரி 3-வது வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு இடையே நேற்று ஆளுநர் தரப்பில் இருந்து தமிழக முதல்வருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.  தமிழக ஆளுநர் கிடப்பில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக கலந்து ஆலோசனை நடத்த  தமிழக முதல்வருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி  அழைப்பு விடுத்துள்ளார்.

ஆனால், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், தற்போது மி்க்ஜாம் புயல் பாதிப்பு தொடர்பாக மத்திய குழு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் பார்வையிட்டு ஆலோசனை நடத்தி வருவதால்  உடனே சந்திக்க இயலாது, விரைவில் சந்திக்க  இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.