சென்னை: ஆன்லைன் தேர்வை வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தப்போவதாக மாணவர்கள் அமைப்பின் தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில்,  கடற்கரையில் போலீசார்  குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு உயர்கல்வித்துறை கல்லூரி மாணவர்களுக்கான தேர்வை நேரடி எழுத்துத்தேர்வாக அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள், ஆன்லைன் மூலம் பாடம் நடத்திவிட்டு, ஆஃப் லைன் தேர்வை நடத்தக்கூடாது என்றும், ஆன்லைன் மூலமே தேர்வு நடத்த வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், தமிழகஅரசு அதை ஏற்க மறுத்தால், மாணவர்கள் போராட்டம் தொடங்கியது.

முதன்முதலாக மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை தொடங்கிய நிலையில், தொடர்ந்து சென்னை உள்பட மற்ற மாவட்ட கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, எழுத்துத்தேர்வுதான நடைபெறும், ஆன்லைன் தேர்வு கிடையாது என தெரிவித்த அமைச்சர் பொன்முடி, மாணவர்களுக்கு மேலும் கால அவசகாசம் வழங்கப்படுவதாகவும்,  ஜனவரி 20ந்தேதிக்கு பிறகு தேர்வு நடைபெறும் என அறிவித்தார்.

ஆனால், அதை ஏற்க மறுத்து வரும் மாணவர்கள், சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தப்போவதாக சமூக வலைதளங்களில் அறிவித்து வருகின்றன. மெரினா போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டம் போல, மீண்டும் ஒரு போராட்டம் நடைபெற்றுவிடுமோ என்ற அச்சத்தில், மெரினாவில் இளைஞர்கள், இளைஞிகள் கூடுவதை காவல்துறையினர் தடுத்து வருகின்றனர். சென்னை மெரினா கடற்கரையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  கடற்கரைக்கு வரும் இளஞ்சோடிகள் உள்ப அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.

மேலும, ஆன்லைனில் தேர்வு நடத்தக்கோரி மெரினாவில் போராட்டம் நடத்தப்போவதாக வரும் செய்திகளை நம்பவேண்டாம் என்றும், மெரினாவில் கூடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.