சென்னை:
மோடி வருகையை முன்னிட்டு, விவசாயிகள் போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணனை வீட்டு சிறை அடைத்து தமிழக காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார். இதை யொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

டெல்லியில் இருந்து விமானப்படை விமானம் மூலம் புறப்பட்டு காலை 10.35 மணிக்கு சென்னை வருகிறார். விமான நிலையத்தில் பிரதமரை ஆளுநர் பன்வாரிலால் புரோ ஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல் வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வரவேற்கின்றனர்.

விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் ஐஎன்எஸ் அடையாறு செல்லும் பிரதமர், அங்கிருந்து காரில் விழா நடக்கும் நேரு உள்விளையாட்டு அரங் கத்துக்கு செல்கிறார். அங்கு 11.15 முதல் 12.30 மணி வரை நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்திய ராணுவத்துக்காக தயாரிக்கப்பட்ட அர்ஜூன் ரக பீரங்கியை ராணுவத்திடம் ஒப்படைக்கிறார். விரிவு படுத்தப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் சேவையை தொடங்கிவைக்கிறார்.

இந்நிலையில், சென்னை வரும் மோடிக்கு எதிராக போராட்டம் எதுவும் நடைபெற்று விடக் கூடாது என்று கருதிய தமிழக அரசு விவசாயிகள் போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணனை வீட்டு சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவரை காவல் துறையினர் கே.பாலகிருஷ்ணனை வீட்டு சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தலைவர்களை வீட்டு சிறையில் அடைப்பது தமிழகத்தில் இதுவரை நடக்காத ஒன்று என்றும், ஜம்மு காஷ்மீர் மாநில அரசின் நடவடிக்கைகளை தமிழக அரசு தற்போது அமல் படுத்தி வருவதும் மிகப்பெரிய ஆபத்தை உண்டாக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர்.