டெல்லி: கேரளாவில் மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக, அவர்களுக்கு நெருக்கமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள தேசிய புலனாய்வுதுறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல், தமிழகம், கேரளா, கர்நாடக மாநிலங்களின் 23 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த வாரம் கேரளாவில் மாவோயிஸ்டு ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, 23 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டு காளிதாஸ் என்பவரின் சகோதரர் வீடு சிவகங்கை மாவட்டம் அண்ணா நகரில் உள்ளது. அங்கு இன்று அதிகாலை வந்த என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், தேனி, பெரியகுளம் எண்டபுளி அண்ணாநகரில் வசிக்கும் வேல்முருகன் வீடு, கோவையில் புலியகுளத்தில் வசிக்கும் டாக்டர் தினேஷ் மற்றும் டேனிஷ், பொள்ளாச்சி அருகே அங்கலகுறுச்சியில் உள்ள சந்தோஷ் என்பரின் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்த கேரளாவின் பல பகுதிகள் மற்றும் கர்நாடகா மாநிலத்தின் சில இடங்களிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.