ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் சோபியானில் ராணுவத்தினர் நடத்திய அதிரடி வேட்டையின்போது 3 பயங்கரவாதிகள்  என்கவுண்டர் செய்யப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்த பிறகு, காஷ்மீரில் பயங்கரவாத அமைப்பின் தாக்குதல்கள் மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம்,  மருந்துக் கடை உரிமையாளர், சாலையோர வியாபாரி, டாக்ஸி ஓட்டுநர் மற்றும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர் உட்பட 7 அப்பாவிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்ட ராணுவத்தினர்மீதும் திடீர் தாக்குதரல் நடத்தினர். இதில் 5 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

இதனால், கடும் கோபமடைந்த ராணுவத்தினர், பூஞ்ச், ரஜோரி, சோபியான், அனந்த்நாக், பந்திப்போரா ஆகிய மாவட்டங்களில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை தேடும் பணியை தீவிரப்படுத்தினர். அப்போது,  சோபியான் மாவட்டத்தில் பதுங்கி இருந்த பயங்கரவாகிள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிச்செல்ல முயன்றனர். அப்போது அவர்களை சுற்றி வளைத்த பாதுகாப்பு படை வீரர்கள், 3 பயங்கவாதிகளை சுட்டுத்தள்ளினர். அவர்களிடம் இருந்து  ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூஞ்ச் பகுதியில் நேற்று 5 வீரர்கள் வீரமரணம் அடைந்ததை தொடர்ந்து இந்த என் கவுண்ட்டர் சம்பவம் நடந்தேறியுள்ளது. ‘லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும், தேடுதல் வேட்டை நடைபெறுகிறது’ என்று காஷ்மீர் மண்டல காவல்துறை தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.