சென்னை:
தமிழகத்தில் கடந்த ஆண்டு சொத்துவரி 100 சதவிகிதம் அளவில் உயர்த்தப்பட்ட நிலையில், விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை மனதில் கொண்டு, சொத்துவரியை குறைக்க தமிழகஅரசு திட்டமிட்டு உள்ளதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை மாநகராட்சி, 2017 – 2018ம் ஆண்டு சொத்து வரி வசூல், 593 கோடி வரி வசூல் செய்தது. பின்னர் உயர்த்தப்பட்ட சொத்து வரி காரணமாக வரி வசூல் ரூ.1000 கோடியை எட்டியது. பின்னர், அதை 1400 கோடி அளவுக்கு வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.‘இதற்காக, அனைத்து மண்டல உதவி வருவாய் அலுவலர்கள் தலைமையில், வருவாய் துறை ஊழியர்கள், வரி வசூல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.ஊழியர் பற்றாக்குறையால், மற்ற துறை சார்ந்த ஊழியர்களும், வரி வசூலில் ஈடுபட்டுவருகின்றனர்.
கடந்த, 18 ஆண்டுகளாக உயர்த்தப்படாத சொத்து வரியை சென்னை உயர்நீதி மன்ற உத்தரவின் பேரில்,சொத்துவரி உயர்த்தப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது. சென்னை உள்பட மாநிலம் முழுவதும் உயர்த்தப்பட்ட சொத்து வரி தீவிரமாக வசூலிக்கப்பட்டு வந்தது. சொத்து வரி செலுத் தாதவர்கள் மீது, ஜப்தி நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.
இந்த சொத்து வரி உயர்வு பொதுமக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் அதிகாரிகளின் தீவிர வரி வசூல் வேட்டையும் மக்களுக்கு துன்பத்தை கொடுத்து வருகிறது. சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை 800 கோடி ரூபாய் வரி வசூலிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், நடப்பாண்டின் இரண்டாவது அரையாண்டு முடிய இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் தற்போதே, மாநகராட்சியின் சொத்துவரி வசூல், 593 கோடி ரூபாயை எட்டி உள்ளது.
இதற்கிடையில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலையும் நடத்த வேண்டிய கட்டாயத்தில் தமிழகஅரசு உள்ளது. இதன் காரணமாக மக்களிடையே எளிதில் வெற்றிக்கனியை பறிக்கும் நோக்கில் சொத்துவரியை குறைக்கலாமா என்பது குறித்து தமிழகஅரசு தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதுதொடர்பாக ரகசிய ஆலோசனைகள் நடைபெற்றதாகவும், வரியைக் குறைத்தல், வரி விகிதங்களில் உள்ள முரண்பாடுகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சென்னையில், 1.59 லட்சம் குடியிருப்பாளர்கள் மற்றும் வணிகர்கள் சொத்துக்களை வைத்திருக்கிறார்கள், வணிக கட்டிடங்கள் விஷயத்தில் 100% க்கும், குடியிருப்பு கட்டமைப்புகள் விஷயத்தில் 50% க்கும் அதிகமாக வரி செலுத்து வதாக கண்டறியப்பட்டுள்ளது. சொத்து வரி தொடர்பாக ஏராளமான புகார்களும் குவிந்துள்ளன.
இதுகுறித்து ஆய்வு செய்ய கார்ப்பரேஷனின் வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமையில், சொத்து வரி விகிதங்களைக் குறைப்பதற்கான வழிகளை ஆராய கார்ப்பரேஷன் ஒரு குழுவை அமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக வீடுகளின் உரிமையாளர்களுக்கு சொத்து வரியில் நிவாரணம் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், சொத்து வரியை உயர்த்தினால் மட்டுமே, தற்போது, மாநகராட்சி வாங்கியுள்ள கடன் களை அடைக்க வும், முழுமையான கட்ட மைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ஆனால், தமிழகஅரசோ, உள்ளாட்சித் தேர்தலை மனதில் கொண்டு சொத்துவரியை குறைத்து அறிவித்து, மக்களிடையே நன்மதிப்பை பெறலாம் என்றும், அந்த சூட்டோடு சூடாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால் வெற்றி பெற்றுவிடலாம் என்று கனவுகண்டு வருகிறது….