கொழும்பு:

லங்கை முழுவதும் தேவாலயங்களில் நாளை (ஞாயிறு) வழிபாடுகள் ரத்து செய்யப்படுவதாக கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது.  ஏற்கனவே ஈஸ்டர் பண்டிகையன்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் போன்று மீண்டும் தாக்குதல் நடக்கும் அபாயம் காரணமாக முன்னெச் சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இலங்கையில் கடந்த 21-ந் தேதி ஈஸ்டர் பண்டிகை அன்று பல தேவாலயங்கள் உள்பட 8 இடங்க ளில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 300க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்த குண்டுவெடிப்புக்கு ஐஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்ற நிலையில், தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கும் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களி டம் நடத்தப்பட்டு வரும் விசாரணையை தொடர்ந்து, இலங்கையில் மேலும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படலாம் என்று உளவுத்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த சூழ்நிலையில், இலங்கை முழுவதும் வழக்கமாக நடைபெற்று வரும் ஞாயிற்றுக்கிழமை வழிபாடுகளை தவிர்க்க கத்தோலிக்க திருச்சபை முடிவு செய்துள்ளது.

இதையடுத்து,  தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடக்கும் வழிபாடுகள் (திருப்பலி) ரத்து செய்யப்படுவதாக இலங்கை கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது. மறுஉத்தரவு வரும்வரை இந்த கூட்டங்களை ரத்து செய்ய கார்டினல் ரஞ்சித் உத்தரவிட்டிருப்பதாக பேராயர் இல்ல செய்தித்தொடர்பாளர் எட்மண்ட் திலகரத்னே தெரிவித்துள்ளார்.