சென்னை:
ளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு தமிழகம் முழுவதும் பணம் கடத்தலுக்கு துணை சென்றதாக கூறப்பட்ட புகாரைத் தொடர்ந்து, மேற்கு, மத்திய மண்டல ஐஜிக்கள் மற்றும் கோவை மாவட்ட எஸ்பி நேற்று அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர்.

இதற்கான உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது. அவர்களுக்கு தேர்தல் அல்லாத பணிகளை ஒதுக்கும்படியும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதற்கு, இன்னும் 5 நாட்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் முழு வீச்சில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக அமைச்சர்கள் மீது தொடர் ஊழல் புகார்கள் மற்றும் கோஷ்டி மோதல்களால் பொதுமக்கள், ஆளுங்கட்சியினர் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதையடுத்து, இந்திய தேர்தல் ஆணையம் பணப்பட்டுவாடாவை கண்காணிக்க வடமாநிலங்களில் இருந்து சிறப்பு தேர்தல் பார்வையாளர்களை நியமித்துள்ளது. அவர்களை விசாரணை நடத்தும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அவர்கள் விசாரணை நடத்தி, மேற்கு மண்டல ஐஜி தினகரன், மத்திய மண்டல ஐஜி ஜெயராம், கோவை மாவட்ட எஸ்பி அருள் அரசு ஆகிய 3 காவல் துறை அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதை உறுதிப்படுத்தினர். இதையடுத்து அந்த 3 காவல் துறை அதிகாரிகளை தேர்தல் அல்லாத பணியில் மாற்ற வேண்டும் என்று தேர்தல் பார்வையாளர்கள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு அறிக்கை ஒன்றை அளித்தனர்.

அந்த அறிக்கையின்படி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் 3 காவல் துறை உயர் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்ய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி இருந்தார். ஆனால் அவர்களை மாற்றக் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருந்தது. அதற்காக தேர்தல் ஆணையத்தில் தீவிரமாக தமிழக அரசு முயன்று வந்தது. இந்நிலையில் குற்றச்சாட்டுக்கு உள்ளான மேற்கு மண்டல ஐஜி தினகரன், மத்திய மண்டல ஐஜி ஜெயராம், கோவை மாவட்ட எஸ்பி அருள் அரசு ஆகியோரை அதிரடியாக நேற்று இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் அல்லாத பணியிடத்துக்கு மாற்றி உத்தரவிட்டது. 3 பேரையும் பணியில் இருந்து இந்திய தேர்தல் ஆணையம் உடனே விடுவித்துள்ளது.

அந்த உத்தரவில், மத்திய மண்டல ஐஜியாக தீபக் எம்.தாமூர், மேற்கு மண்டல ஐஜியாக அமல் ராஜ், கோவை மாவட்ட எஸ்பியாக செல்வ நாகரத்தினம் ஆகியோரை நியமிப்பதாக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. புதியதாக நியமிக்கப்பட்டுள்ள 3 அதிகாரிகளும் இன்று பிற்பகல் 1 மணிக்குள் பதவி ஏற்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஐஜிக்கள் தினகரன், ஜெயராம், எஸ்பி அருள் அரசு ஆகிய மூன்று பேரையும் டிஜிபி அலுவலகத்தில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த 3 பேருக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி இல்லாமல் வேறு பதவி வழங்க கூடாது என்றும் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், திருச்சியில் திமுகவினர் மீது பொய் வழக்கு பதிவு செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக திருச்சி போலீஸ் கமிஷனர் லோகநாதன் நேற்று முன்தினம் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் நிர்வாகப் பிரிவு ஐஜியாக இருந்த அருண், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக பணியிடம் மாற்றம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக 3 போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில், இதே புகாரின் அடிப்படையில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.