சென்னை

ன்று முதல் தமிழகத்தில் விவசாய மின் இணைப்புக்களுக்கு 24 மணி நேர மும்முனை மின் விநியோகம் செய்யப்பட உள்ளது.

தமிழகத்தில் வீடுகளுக்கு இரண்டு மாதங்களுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது.  மேலும் விவசாயப் பணிகளுக்கும் இலவச மின் விநியோகம் அளிக்கப்படுகிறது.  அவ்வகையில் தமிழகத்தில் 22 லட்சம் மின் இணைப்புக்கள் இலவச மின் விநியோகம் பெற்று வருகின்றன.

இந்த இலவச மின்சாரம் ஒரு முனையில் மட்டுமே பல இடங்களில் வழங்கப்படுகின்றன.   மேலும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே விவசாய இணைப்புக்களுக்கு மின் விநியோகம் அளிக்கப்படுகின்றது.   விவசாயிகள் தங்களுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின் விநியோகம் செய்ய வேண்டுகோள் விடுத்தனர்.

தமிழக முதல்வர்  கோரிக்கையை ஏற்று விவசாயப்  பணிகளுக்கு ஏப்ரல் 1 முதல் எந்நேரமும் மும்முனை மின்சாரம் அளிக்கப்படும் என அறிவித்தார்.  இது அரசாணையாக வெளியிடப்பட்டது.  இன்று முதல் அந்த அரசாணை அமலாகிறது.  இதனால் மின் தேவை வழக்கத்தை விட 500 மெகாவாட் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.