டில்லி

ந்த வேட்பாளரும் ராணுவத்தினர் புகைப்படங்களை வைத்து தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சென்ற மாதம் நடந்த புல்வாமா தாக்குதலை ஒட்டி இந்திய விமானப்படை பாலகோட் பகுதியில் தாக்குதல் நடத்தியது. அதை ஒட்டி பாகிஸ்தான் விமானப்படை எல்லை தாண்டி தாக்குதல் நடத்தியதால் அவர்களை விரட்டி சென்ற விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டார். பிறகு உலக நாடுகள் அழுத்தம் காரணமாக அவர் விடுவிக்கப்பட்டார்.

அபிநந்தன் புகைப்படத்தை பாஜக தனது தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்துவதாக குற்றச் சாட்டுக்கள் எழுந்தன. டில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி டில்லியில் நடந்த பைக் பேரணியில் ராணுவ உடையில் கலந்துக் கொண்டார். அத்துடன் அதே உடையில் அவர் அபிநந்தனை பாராட்டி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கவிதைகள் படித்தார். இந்த வீடியோவுக்கும் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

முன்னாள் ராணுவ தலைவர் ராமதாஸ் ராணுவத்தினரின் தியாகங்கள் மூலம் அரசியல் க்ட்சிகள் ஆதாயம் அடைய பார்ப்பதாகவும் அதை தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். சமூக வலைதளங்களில் பல நெட்டிசன்கள் அபிநந்தன் புகைப்படத்தை பாஜக தேர்தல் பிரசார சுவரொட்டிகளில் பயன்படுத்தியதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்க்கையில், “கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எந்த ஒரு அரசியல் கட்சியும் ராணுவ நடவடிக்கைகள், ராணுவத்தினர் புகைப்படங்கள், சீருடைகள் ஆகியவைகளை தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தக் கூடாது என ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி எந்த ஒரு வேட்பாளரும் ராணுவத்தினர் புகைபடங்களையோ ராணுவ நடவடிக்கைகளையோ ராணுவ சீருடைகளையோ பயன்படுத்தக் கூடாது என மீண்டும் தேர்தல் ஆணையம் நினைவூட்டுகிறது” என அறிவித்துள்ளது.