பிரதமர் உரை தேர்தல் விதிமுறைகளை மீறியதா என ஆராயப்படும் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Must read

டில்லி

நேற்று பிரதமர் மோடியின் தொலைக்காட்சி உரை தேர்தல் விதிகளை மீறியதா என ஆராய்ப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் விதிகள் அமுலுக்கு வந்து விடும்.   அதன் பிறகு அரசின் சாதனைகள் மற்றும் சலுகை அறிவிப்புக்கள் உள்ளிட்ட அனைத்தும் தடை செய்யப்பட்டவை ஆகும்.    இதன் மூலம் வாக்காளர்களை கவர ஆளும் கட்சி முயற்சி செய்யும் என்பதனால் இந்த தடை உத்தரவு உள்ளது.   கட்சிகள் தங்களது நலத் திட்டங்களை தேர்தல் அறிக்கை மூலம் மட்டுமே தெரியப்படுத்த வேண்டும்.

நேற்று பிரதமர் மோடி காலையில் தாம் தொலைக்காட்சி மற்றும் வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு ஒரு தகவல் அளிக்க உள்ளதாக கூறிய உடனேயே இது குறித்த சர்ச்சைகள் தொடங்கின.    அத்துடன் ஏற்கனவே மோடி இரு வருடங்களுக்கு முன்பு இது போல அறிவிப்பு வெளியிட்டு அதன் பிறகு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்ததால் மக்கள் மிகவும் அச்சமடைந்தனர்.

நேற்று பகல் மோடி தனது உரையில் இந்தியா புதிய ஏவுகணையான ஏ சாட் என்னும் செயற்கைக் கோள்களை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி அடைந்ததாக குறிப்பிட்டார்.    இது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்திய போதும்  இவ்வாறு அரசின் சாதனைகளை  இந்த சமயத்தில் அறிவிப்பது தேர்தல் விதிகளை மீறியது என பலர் கருதுகின்றனர்.

இது குறித்து மார்க்சிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.   பிரதமர் மோடி இந்த அறிவிப்பின் மூலம் தேர்தல் விதிகளை மீறி உள்ளதாக பல எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மின்னணு ஊடகங்கள் மூலம் பிரதமர் நாட்டு மக்களுக்கு செய்தி விடுத்துள்ளது குறித்த புகார்கள் ஆணையத்துக்கு வந்துள்ளன.   தேர்தல் விதி மீறல் குறித்து ஆராய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.   அந்தக் குழு இந்த உரை தேர்தல் விதிகளை மீறியதா என்பதை குறித்து ஆராய உள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article