ம்மு

ஸ்டேட் வங்கி அளித்துள்ள தேர்தல் பத்திர விவரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் எனத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் அறிவித்துள்ளார்

தேர்தல் பத்திரங்கள் திட்டம் தனிநபர்கள், நிறுவனங்கள் தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக நிதி வழங்கும் வகையில் கொண்டுவரப்பட்டது. இந்த தேர்தல் பத்திரங்கள் ஸ்டேட் வங்கி மூலம் விற்கப்பட்டு ஒவ்வொரு அரசியல் கட்சியும் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து தேர்தல் பத்திரங்கள் மூலமாக பெருமளவு நன்கொடையை பெற்றன.

கடந்த மாதம் 15 ஆம் தேதி தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி பெறுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனக் கூறி இந்த தேர்தல் பத்திரங்கள் முறையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நிதி மற்றும் நிதியைக் கொடுத்தவர்களின் விவரங்களை வெளியிடவும் ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட்டது.

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை வழங்க ஜூன் 30-ந்தேதி வரை கால அவகாசம் தரும்படி உச்சநீதிமன்றத்தில் ஸ்டேட் வங்கி மனுத் தாக்கல் செய்தது. உச்சநீதிமன்றம் ஸ்டேட் வங்கியின் கோரிக்கையை நிராகரித்ததோடு, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை மார்ச் 12 ஆம்தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் வழங்க உத்தரவிட்டதன்படி நேற்று விவரங்கள் வழங்கப்பட்டது.

இந்த விவரங்களைத் தேர்தல் ஆணையம் மார்ச் 15 ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.  இன்று ஜம்மு காஷ்மீரில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இந்தியத் தேர்தல் ஆணைய ராஜீவ் குமார் ஆய்வு மேற்கொண்டார்.  அப்போது அவர் செய்தியாளர்களிடம், ஸ்டேட் வங்கி அளித்துள்ள தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் என அறிவித்துள்ளார்.