டில்லி

க்களவை தேர்தலில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் இடமாற்றம் செய்யப்படுவதாக எழுப்பப்பட்ட புகார் தவறானது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மக்களவை தேர்தலுக்கான ஏழு கட்ட வாக்குப்பதிவு நேற்று முன் தினம் ஞாயிற்றுக் கிழமையுடன் முடிவடைந்தது.   இந்த வாக்குகள் வரும் 23 ஆம் தேதி அன்று எண்ணப்பட உள்ளன.   இந்த வாக்கு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை முகாம்களில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன.

இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்து வருவதாகவும் ஒரு சில இடங்களில் இந்த மின்னணு வாக்கு இயந்திரங்கள் இடமாற்றம் செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.   காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி இது குறித்து ஆடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த செய்தியில் பிரியங்கா காந்தி, “தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு மூலம் பாஜக வெற்றி பெறும் என்னும் பொய் செய்தி பரவி வருகிறது.  இதனால் யாரும் மனம் தரள வேண்டாம்.  வாக்கு எண்ணிக்கையின் போதும் அதற்கு முன்பும் கவனமாக இருக்க வேண்டும்” என தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று  தேர்தல் ஆணையம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாக வந்த செய்தி தவறானது என மறுத்துள்ளது.   அத்துடன் வாக்குப் பதிவு இயந்திரங்களில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை எனவும் உறுதி அளித்துள்ளது.