பெரும்பாலான பெற்றோர்கள் தமது குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் (பனிக்குழை) கொடுப்பதை ஒரு பெருங்குற்றமாகக் கருதி வருகின்றனர். ஆனால், தற்போது வெளிவந்துள்ள ஒரு ஆய்வு முடிவு, நமது கருத்தினை மறுபரிசீலனை செய்து மாற்றிக்கொள்ள வகைசெய்துள்ளது. குழந்தைகள் காலையில் குளிர்நீர் மற்றும் இனிப்பான ஐஸ்கிரீம்களை உண்டால் அந்த நாள் முழுக்க சுறுசுறுப்புடனும், புத்திசாலித்தனத்துடனும் இருப்பதாக ஜப்பானில் உள்ள கியோரின் பல்கலைக்கழக பேராசிரியர் யோஷிஹிகோ கோகா வெளியிட்ட ஒரு புதிய ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

ஜப்பான் நாட்டின் எக்ஸைட் செய்திகள் வலைத்தளத்தில் செவ்வாய்க் கிழமை இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டன.

பேராசிரியர் கோகா, குழந்தைகளைக் கொண்டு இந்த ஆய்வினை நடத்தினார். முதலில் இந்த ஆய்வில், சில குழந்தைகளுக்கு அவர்கள் தூங்கி எழுந்தவுடன் ஐஸ்கிரீம் சாப்பிட கொடுக்கப்பட்டனர். அந்தக் குழந்தைகளின் மூளை செயல்பாடுகளை ஐஸ்கிரீம் சாப்பிடாத குழந்தைகளுடன் ஒப்பிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பேராசிரியர் கோகா கூறுகையில், “ காலையில் ஐஸ்கிரீம் உண்ணாதவர்களை விட, ஐஸ்கிரீம் உட்கொண்ட குழந்தைகள் நல்ல சுட்டியாக, வேகமாகச் சிந்தித்து நுட்பத்துடன் செயல்படுவதையும் கண்டுபிடித்தோம். மேலும், காலையில் ஐஸ்கிரீம் முதல் உணவாய் உண்டவர்களின் மூளையில், உயர் அதிர்வெண் ஆல்பா அலைகள் அதிகமாகி மூளை செயல்பாட்டுத் திறனை அதிகரிப்பதாகவும், அவர்களின் மூளை உஷார்நிலையில் உள்ளதாகவும், மன எரிச்சல் குறைந்து காணப்பட்ட்தாகவும் கண்டறியப்பட்டது.

மீண்டும் இரண்டாவது முறையாக அதே குழந்தைகள் ஆய்விற்குட்படுத்தப்பட்டனர்.ஆனால் இம்முறை ஐஸ்கிரீமுக்கு பதில், வெறும் குளிர்ந்த நீர் மட்டும் வழங்கப்பட்டது. இம்முறை, குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் சோதனையின்போது அடைந்த அளவிற்கு மூளை சுறுசுறுப்புடன் காணப்படவில்லை.

கோகா கூறுகையில், “ இந்த ஆராய்ச்சி இன்னும் நிறைவடையவில்லை. ஐஸ் கிரீம் உள்ள எந்தக் குறிப்பிட்ட மூலப்பொருள், மூலை புத்துனர்ச்சி அடையவும், மன ஊக்கத்தை பெறவும் காரணமாகவுள்ளது என்பதை ஆராய்ந்து தீர்மானிக்க வேண்டும். மேலும், ஐஸ்கிரீமிற்கு நேர்மறையான உணர்ச்சி மற்றும் அதிக அளவு ஆற்றலைத் தூண்டும் சக்திவுள்ளதா என்பதை ஆராய வேண்டும்” என்றார்.
இனி, குழந்தைகளுக்கு முகம்சுளிக்காமல் ஐஸ்கிரீமை தந்து, அவர்கள் நாள்முழுவதும் சுறுசுறுப்புடன் இருப்பதை பார்த்து ரசிக்கலாம்.