சென்னை:
மிழகம் முழுவதும் நேற்று முதல் இ-பதிவு நடைமுறைக்கு வந்தது. இதையடுத்து திருமணம், இறப்பு, சிகிச்சைக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் நபர்கள், மாவட்டத்தின் உள்ளே பிற பகுதிகளுக்கு இ-பதிவு செய்ததற்கான ரசீது வைத்திருந்தவர்களின் வாகனங்களை மட்டும் போலீசார் அனுமதித்தனர்.

முன் அனுமதி பெறாமல் வாகனங்களில் வந்தவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து திருப்பி அனுப்பி வைத்தனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு தொற்றின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்து வருகிறது. தொற்றின் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதால், தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.

அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் கடந்த 10ம் தேதி முதல் வரும் 24ம் தேதி வரை சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்களை தடுக்கும் வகையில் மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் நபர்களை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று (17ம் தேதி) முதல் மாவட்டங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு இ-பதிவு கட்டாயம் என்று அரசு அறிவித்திருந்தது. அதற்கான கால கெடுவும் 2 நாட்கள் அரசு வாங்கியது. அதைதொடர்ந்து திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முக தேர்வு, வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கிடையே பயணம் செய்யும் பொதுமக்கள் இ-பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டது.

இ-பதிவு செய்த பிறகு சம்பந்தட்ட நபர்களுக்கு அளிக்கப்படும் ரசீது ஆதாரத்தை கொண்டு தடையின்றி, பொதுமக்கள் பயணத்தை மேற்கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் இருந்து யார், யார் வருகிறார்கள் என்பதை கண்காணித்து, அதனடிப்படையில் கொரோனா பரவலை தடுப்பதற்கான முயற்சியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.பொதுமக்கள் தங்களிடம் உள்ள ஆவணங்களை கொண்டு https:eregister.tnega.org என்ற தளத்தில் இ-பதிவு செய்ய வேண்டும். உரிய ஆவணங்களை சமர்ப்பிப்பவர்களுக்கு பதிவு செய்ததற்கான ரசீது உடனடியாக கிடைக்கும் வகையில் இந்த இ-பதிவு உள்ளது. இதனால் யாரும் காத்திருக்க தேவையில்லை. இந்த திட்டம் நேற்று காலை முதல் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், போலீசார் மாவட்டங்களுக்கு இடையே சோதனை சாவடிகள் அமைத்து தீவிரமாக சோதனையை மேற்கொண்டனர்.

அப்போது கார், டெம்போ உள்ளிட்ட வாகனங்களில் வந்த நபர்களை போலீசார் தடுத்து நிறுத்தி இ-பதிவு செய்ததற்கான ரசீதை கேட்டனர். இ-பதிவு ரசீது வைத்திருந்த நபர்களை மட்டும் வாகனங்களில் செல்ல போலீசார் அனுமதி வழங்கினர். இ-பதிவு இல்லாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்து திருப்பி அனுப்பினர். மாவட்டங்களுக்குள் இ-பதிவு செய்யாமல் வந்தவர்களை போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும் இ-பதிவு ரசீதுடன் வந்தாலும் வாகனங்களில் சமூக இடைவெளி இல்லாமல் மற்றும் முகக்கவசம் இல்லாமல் கூட்டம் வந்தவர்களிடம் போலீசார் எச்சரித்து வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலித்தனர். இந்த நடைமுறையை சென்னை உட்பட மாநிலம் முழுவதும் போலீசார் முறையாக கடைப்பிடித்தனர். இ-பதிவு செய்யும் நபர்கள் அனைவர்களுக்கு மாவட்ட நிர்வாக அனுமதி அளிக்கப்படுவதால் வெளியூர் செல்பவர்கள் உரிய ஆவணங்களுடன் இ- பதிவு முறையில் விண்ணப்பித்த பின்பே பயணம் செய்ய போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.