சேலம்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இ-பாஸ், கொரோனா, புதிய கல்விக்கொள்கை, பள்ளிகள் திறப்பு, தேர்தல் கூட்டணி உள்பட செய்தியளார்களிடன்  பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் வழங்குவதாக நீங்கள் அறிவித்தீர்களே அது எப்போது செயல்படுத்தப்படும்?

மருத்துவர்கள், செவிலியர்கள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாக சிகிச்சை அளித்து வருகிறார்கள். அப்படி அந்த பணியில் ஈடுபட்டவர்கள் உயிரிழந்தால் அவர்களது குடும்பத்துக்கு 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தேன். மத்திய அரசும் இன்சூரன்ஸ் வழங்குகிறது. மற்ற பணிகளில் ஈடுபட்டு உயிரிழந்தால் அவர்களது குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் கூறினார்.

மும்மொழி கொள்கையை கல்வி நிறுவனங்கள் தடுக்க முடியாது என்று புதிய கல்விக்கொள்கையில் கூறப்பட்டுள்ளதே?

தமிழ்நாட்டில் தொடர்ந்து இருமொழி கொள்கை தான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆங்கிலம், தமிழ் தான் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அண்ணா, எம்.ஜி.ஆர், அம்மா வழி யில் தொடர்ந்து இதனை பின்பற்றி வருகிறோம். மத்திய அரசு அறிவித்துள்ள மும்மொழி கொள்கை பற்றி பரிசீலிக்க ஒரு குழு அமைத்துள்ளோம். அந்த குழு அறிக்கை வந்ததும் முடிவுகள் எடுக்கப்படும் என்று முதல்வர் கூறினார்.

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்?

முதலில் கொரோனா தொற்று குறைய வேண்டும். இது உயிர் பிரச்சினை.  குழந்தைகளை பாதுகாப்பாக இருக்கவேண்டும் என பெற்றோர்கள் அச்சப்படுகிறார்கள்.  இது இந்தியா முழுவ தும் உள்ள பிரச்சினை. தொற்று குறைந்து உரிய பாதுகாப்பு அம்சங்கள் வரும்போது பள்ளிகள் திறக்கப்படும்.

இ–பாஸ் தடையின்றி வழங்கப்படுமா ?

இ–பாஸ் வழங்க ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்கனவே ஒரு குழு உள்ளது. அந்த குழு தான் பரிசீலித்து இ–பாஸ் வழங்கி வந்தனர். மேலும் துரிதமாக இ–பாஸ் வழங்கும் வழியாக இப்போது மேலும் கூடுதலாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இ–பாஸ் வேண்டும் என யாரும் விண்ணப்பித்தால் அந்த மனு முறையாக இருந்தால் இ–பாஸ் கொடுப்பார்கள். அத்தி யாவசிய பணிகளுக்கு உடனடியாக தாமதமின்றி வழங்கப்படுகிறது. தொழில் நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் பற்றி பட்டியல் தந்தால் அனுமதி அட்டை வழங்கப்படுகிறது.

வெளிமாநில தொழிலாளர்கள் இங்கு வந்து பணிபுரிய விரும்பினால் இ–பாஸ் பெற்று அவர்களை இங்கு தொழில் நிறுவனங்கள் அழைத்து வரலாம். அவர்கள் மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்படுவார்கள். அவர்களுக்கு பாசிட்டிவ் இருந்தால் அரசு மருத்துவமனை யில் சிகிச்சை அளிக்கப்படும். சிகிச்சைக்குப் பின் அவர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

இ–பாஸ் வழங்குவதை இன்னும் எளிமையாக்கவேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு சொல்லி இருக்கிறோம். அத்தியாவசிய பணிக்கு என யார் விண்ணப்பித்தாலும் உடனே வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கு அவர்கள் முறையான ஆவணங் களை வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படுமா?

ஊரடங்கு என்பது கட்டுப்பாடுதான். கொரோனா தொற்று நோய் என்பது புதிய நோய். இதற்கு இன்னமும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. உலக சுகாதார அமைப்பு மருத்துவ நிபுணர்கள் கருத்துப்படி அரசு சொல்கிறது. வெளியே செல்லும்போது முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு வந்ததும் நன்றாக கை, கால்கள் சோப்பு போட்டு கழுவவேண்டும். வீட்டை, கழிப்ப றையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பொது இடங்களில் உள்ள கழிப்பிடங்களையும் சுத்தமாக வைக்கவேண்டும். கிருமிநாசினி தெளிக்க வேண்டும். இதனை செய்து வந்தாலே தானாக கொரோனா தொற்று குறைந்து விடும். இது தான் ஒரே வழி. அரசு சொல்லும் வழிமுறைகளை பின்பற்றினால் எளிதாக நாம் விடுபடலாம். இந்த தொற்று நோய்க்கு இன்னும் மருந்து வரவில்லை. அப்படி மருந்து கிடைத்தால் அதனை உடலில் செலுத்தலாம்.

பிளாஸ்மா தானம் செய்யுங்கள்

கொரோனா தொற்று சிகிச்சைக்கு பிளாஸ்மா சிகிச்சை நல்ல பலனை தருகிறது. சென்னை யில் 51 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை செய்யப்படுகிறது. கொரோனா சிகிச்சை முடிந்த ஒருவர் 14 நாட்கள் கழித்து, பிளாஸ்மா தானம் செய்யலாம். எனவே பிளாஸ்மா தானம் செய்ய முன் வரவேண்டும்.

2021 சட்டமன்ற தேர்தலில் இதே கூட்டணி தொடருமா?

இதுகுறித்து தேர்தல் வரும்போது முடிவு செய்யப்படும்.

அதிமுக அரசை எஸ்.வி.சேகர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறாரே? அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படுமா? 

அவர் ஒரு பெரிய கட்சியின் தலைவராக இருப்பது போல பேசி வருகிறார். பார்லிமெண்ட் தேர்தல் வந்தது. அப்போது நாங்கள் மோடி பிரதமராக வீடு வீடாக சென்று ஓட்டு கேட்டோம். அவர் எங்கும் சென்று ஓட்டு கேட்கவில்லை. அண்ணா தி.மு.க. தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிட்டோம். அவர் மோடி பிரதமராக வரவேண்டும் என எங்கும் போய் பிரச்சாரம் செய்ததாக தெரியவில்லை. ஏன் அவர் பிரச்சாரம் செய்ய வரவில்லை. அவரை நாங்கள் ஒரு பொருட்டாக கருதவில்லை.

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.