சேலம்: வாழப்பாடி அருகே  3 பைக்குள் நேருக்கு நேர் மோதிய சம்பவத்தில் புதுமாப்பிள்ளை  உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகம் நடைபெற்றுள்ளது. மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

அரசு இ-பாஸ் வழங்காததால், இருசக்கர வாகனங்களிலேயே அதிக தூரம் பயணித்ததால், இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சேலம் கன்னங்குறிச்சி மூக்கனேரி பகுதியைச் சேர்ந்த அருண்பாலாஜி (வயது 29). இவருக்கு பெண் பார்த்து திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தான் கட்டியுள்ள புதிய வீட்டின் கிரக பிரவேசத்திற்காக, தனது உறவினர்களை அழைப்பதற்காக, தனது இருசக்கர வாகனத்தில் உறவினர் சந்திரசேகரன் (49) என்பவருடன் சேலத்திலிருந்து ஆத்தூர் நோக்கி சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை சென்று உள்ளார்.

வாழப்பாடி அருகே முத்தம்பட்டி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது,  மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியிலிருந்து சேலத்திலுள்ள உறவினர் வீட்டிற்குத் துக்கம் விசாரிக்க இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த நவீன்குமார் என்பவரின் இரு சக்கர வானத்துடன், அருண் பாலாஜி ஓட்டி வந்த வாகனமும் நேருக்கு நேர் மோதி உள்ளது.

இநத நேரத்தில், நவீன்குமாரை  பின்தொடர்ந்து மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த அவரது தந்தை செல்வமணிகண்டனும்,  வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல்,  விபத்துக்குள் ளான இருசக்கர வாகனங்கள் மீது மோதி உள்ளார்.

இந்த விபத்தில் சேலத்தைச் சேர்ந்த புதுமாப்பிள்ளை அருண்பாலாஜியும், சீர்காழியைச் சேர்ந்த செல்வமணிகண்டனும் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும்,  நவீன்குமார், அவருடன்  பைக்கில் வந்த இவரது மனைவி ஜோதி (20), நவீன்குமாரின் அம்மாவான செல்வமணிகண்டனின் மனைவி  ரூமேந்திரா (50)., அருண்பாலாஜியின் உறவினர் சந்திரசேகரன் ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்தை நேரில் கண்ட முத்தம்பட்டி பகுதி பொதுமக்களும், விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து வாழப்பாடி  காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், , காயம்பட்டவர்களை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.படுகாயமடைந்த 4 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலை யில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து வாழப்பாடி காவல் ஆய்வாளர் சுப்பிரமணியம் தலைமையிலான காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே நேரத்தில் மூன்று இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி, இருவர் உயிரிழந்த சம்பவம், வாழப்பாடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்துக்கு காரணம்,  அதிக தூர பயணம் என்று கூறப்படுகிறது. கொரோனா முடக்கம் காரணமாக தமிழகஅரசு  கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக போக்குவரத்தை தடை செய்திருப்பதுடன், அவசர தேவைக்காக தமிழகஅரசு இ-பாஸ் வழங்கவும்  மறுத்து வருகிறது.

இதன் காரணமாக அவசர மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக ஏராளமானோர் தங்களிடம் உள்ள இருச்சக்கர வாகனம் மூலமே நீண்ட தூரம் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தான், இதுபோன்ற சம்பவங்கள் நிறையை நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அரசு போக்குவரத்தை அனுமதித்திருந்தால், அவர்கள் கார் போன்ற வாகனங்களில் பயணம் செய்திருப்பார்கள் என்றும், இதுபோன்ற துயர சம்பவம் நடைபெற்றிருக்காது என்று பலியானவ்ர் களின் உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.