சென்னை:
ருத்துவ காரணங்களுக்காக வெளியூர் செல்பவர்களுக்கு, அவர்கள் விண்ணப்பித்த   1மணி நேரத்தில் இ.பாஸ் வழங்கப்படுவதாக தமிழக அரசு உயர்நீதி மன்றத்தில் தெரிவித்து உள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 3 முறை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி மே 17ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.  இதற்கிடையில், வெளி மாவட்டங்களில் சிக்கி உள்ளவர்கள், மருத்துவம் போன்ற அவசர தேவைகளுக்காகவோ,  திருமணம் மற்றும்  மரணம் போன்ற நிகழ்வுகளிலும் பங்கேற்கும் வகையில் தமிழகஅரசு இ.பாஸ் வழங்குகி வருகிறது.
ஆனால், இதில் காலதாமதம் ஏற்படுவதாக கூறி, திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன்  என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுமீது நீதிபதிகள் வினித் கோத்தாரி,  புஷ்பசத்யநாரயணா அமர்வு விசாரணை நடத்தியது.  கடந்த விசாரணையின்போது,  24 மணிநேரமும் பாஸ் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் , ஒருவர் பாஸ் பெற 2 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்றால் எமர்ஜென்சி என்பது என்ன அர்த்தம் என்று கூறியதுடன் வழக்கை 11ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
அதன்படி வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகஅரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், வெளியூர் செல்ல அனுமதி கோரும் விண்ணப்பங்களுக்கு 1 மணி நேரத்தில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது என்றும்,  சந்தேக தன்மை உடைய விண்ணப்பங்கள் மட்டுமே நிலுவையில் வைக்கப்படுகிறது என்று தெரிவித்து உள்ளது.
மேலும், கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.