சென்னை: அரசு பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் மாணாக்கர்களுக்கு இ-மெயில் ஐடி கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை, 8.80 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இதையடுத்து, மாணாக்கர்கள் தேர்வு கட்டணம் மற்றும் ஹால் டிக்கெட் தொடர்பாக பல்வேறு அறிவிப்புகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது.
இந்த நிலையில், தற்போது திடீரென பொதுத்தேர்வு எழுத உள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மின்னஞ்சல் எனப்படும் இமெயில் ஐடி கட்டாயம் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. உயர்கல்வி சேர்க்கை, நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு மின்னஞ்சல் தேவைப்பட உள்ளதால், அவர்களுக்கு இமெயில் கிரியேட் செய்து கொடுக்கும்படி பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அதன்படி, அரசு பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களும் இ-மெயில் ஐடியை உருவாக்கும் பணிகளை வரும் 9 ஆம் தேதி தொடங்கி 12 ஆம் தேதிக்குள் முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இதன் மூலம் மாணவர்களுக்கு கல்லூரிகள் மின்னஞ்சல் வாயிலாகவே தகவல்கள் அனுப்ப முடியும் என கூறப்படுகிறது.