சென்னை: 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை முழுமையாக செயல்படுவது போல்   வேல்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு ஆதரவாக மோசடி அறிக்கையை அளிக்க மருத்துவ ஆய்வுக் குழுவை வலியுறுத்தியதாக,  அதிமுக முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் மீது டிவிஏசி (லஞ்ச ஒழிப்பு காவல்துறை) வழக்கு பதிவு செய்துள்ளது.

வேல்ஸ் கல்வி அறக்கட்டளை 1992ஆம் ஆண்டில் தனது தந்தை ஐசரி வேலன் நினைவாக ஐசரி கணேசால் துவங்கப்பட்டது. வேல்ஸ் கடந்த 2008ஆம் ஆண்டில் இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் வேல்ஸ் குழும நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக தகுதி வழங்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகம் (Vels University) தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை பல்லாவரத்தில் அமைந்துள்ளது. இந்த குழுமம், திருவள்ளூர் அருகே மஞ்சங்காரனையில் புதிய மருத்துவக்கல்லூரி தொடங்கி உள்ளது.

இந்த  வேல்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த அதிமுக ஆட்சியின்போது அனுமதி வழங்கப்பட்டது. தேசிய மருத்துவ கவுன்சில் அனுமதி பெற, 300 படுக்கைக்களுடன் மருத்துவமனை முழுமையாக இயங்கி வருவதாகவும் மருத்துவ ஆய்வுக்குழுவுக்கு தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளுக்கு முரணாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அனுமதி வழங்கியுள்ளார் இதற்கு உடந்தையாக அப்போதைய அமைச்சர்  சி.விஜயபாஸ்கர் செயல்பட்டதாகவும் டிவிஏசி குற்றம் சாட்டி உள்ளது.

இந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், வேல்ஸ் பல்கலைக்கழக தலைவர் ஐசரி கணேஷ், வேல் மருத்துவ பல்கலைக்கழக டீன் டாக்டர் கே.சீனிவாசராஜ், சேலம்  குமாரமங்கலம் அரசு மருத்துவமனை டீன் டாக்டர் ஆர்.பாலாஜிநாதன், சேலம்  குமாரமங்கலம் அரசு மருத்துவமனை பேராசிரியர் டாக்டர் டி.எம்.மனேகர், சேலம்  குமாரமங்கலம் அரசு மருத்துவமனை பேராசிரியர் டாக்டர் சுஜாதா, சேலம்  குமாரமங்கலம் அரசு மருத்துவமனை பேராசிரியர் டாக்டர் ஜே.ஏ.வசந்தகுமார் ஆகிய 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள  முதல்தகவல் அறிக்கையில், “திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே மஞ்சகரனையில் உள்ள வேல்ஸ் குழுமத்திற்கு சொந்தமான மருத்துவமனை உள்ளது. இதனை 150 மாணவர்கள் சேர்க்கைக்கான மருத்துவக் கல்லூரியாக மாற்ற 2019 நவம்பர் 3ம் தேதியன்று அனுமதி கேட்டு வேல்ஸ் குழுமத்தின் சேர்மன் ஐசரி கணேஷ் விண்ணப்பபித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து, வேல்ஸ் மருத்துவமனையில் தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகள் முறையாக செயல்படுத்தப்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்வதற்காக கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 11, தமிழக சுகாதாரத்துறை, சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக்கல்லூரி முன்னாள் டீனாக இருந்த பாலாஜி நாதன் தலைமையில் பேராசிரியர்கள் மனோகர், சுஜாதா, வசந்தகுமார் ஆகிய 4 பேர் கொண்ட மருத்துவ குழு அமைத்து உத்தரவிட்டது.

இந்த குழுவினர், 2020ம் ஆண்டு  நவம்பர் 16 அன்று மஞ்சகரனையில் உள்ள வேல்ஸ் மருத்துவமனையில்  ஆய்வு செய்தது. ஆய்வின் முடிவில், தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகள் அனைத்தும் வேல்ஸ் மருத்துவமனையில் முழுமையாக பின்பற்றப்பட்டுள்ளன என்றும், மருத்துவக்கல்லூரி தொடங்க அனுமதி வழங்கலாம் என்றும் அறிக்கை அளித்தனர். அதனைதொடர்ந்து 2020 நவம்பர் 27 அன்று மருத்துவமனையை புதிய மருத்துவக்கல்லூரியாக தொடங்க முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அனுமதி சான்றிதழ் வழங்கியுள்ளார்.

இந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், திமுக அரசு, 2021ம் ஆண்டு அக்டோபர் 18 அன்று புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு உட்பட தமிழகம் முழுவதும் 50 இடங்களில் 200-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து சோதனை நடத்தினர். அதில் கிடைத்த ஆவணங்களைக் கொண்டு, 2021ம் ஆண்டு  நவம்பர் 02 அன்று மஞ்சகரணையில் உள்ள வேல்ஸ் மருத்துவக்கல்லூரியில் அரசு மருத்துவர்கள் அடங்கிய புதிய மருத்துவக்குழு திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, மருத்துவக்கல்லூரிக்கு அனுமதி வழங்க சான்றிதழ் வழங்கிய, டீன் பாலாஜிநாதன் தலைமையிலான மருத்துவக்குழு அளித்த அறிக்கையில் பல தவறான தகவல்கள் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. மேலும் அப்போது வேல்ஸ் மருத்துவமனையில் தேவையான கட்டிடங்கள் கட்டப்பட்டு மட்டுமே வந்துள்ளன ஸ்கேன், எக்ஸ்ரே இயந்திரங்கள் மற்றும் ரத்த வங்கி போன்றவை அப்போது செயல்பாட்டிலேயே இல்லை என்பதும் தெரியவந்தன.

இதுதொடர்பாக புதிய மருத்துவ குழுவினர் அறிக்கை அளித்தனர். அதில், தேசியமருத்துவ ஆணையத்தில் விதிமுறைகளின்படி மருத்துவக்கல்லூரி தொடங்க குறைந்தபட்சம் 300 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை இருப்பது அவசியம். அதேபோல் மருத்துவமனை குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாவது செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் மருத்துவ கல்லூரி அமைக்க வேல்ஸ் குழுமத்திற்கு அனுமதி வழங்கியதில் இந்த விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன என்று குற்றம் சாட்டியுள்ளதுடன்,  வேல்ஸ் மருத்துவக்கல்லூரி டீன் சீனிவாசராஜ், அரசின் அனுமதி சான்றிதழ் பெறுவதற்காக பல பொய்யான தகவல்கள் அளித்துள்ளார். இதுகுறித்து ஆராயாமல் பாலாஜி நாதன் தலைமையிலான மருத்துவக்குழுவினர், வேல்ஸ் மருத்துவமனையில் 300 படுக்கை வசதி மற்றும் மருத்துவக்கல்லூரி தொடங்குவதற்கு தேசிய மருத்துவ ஆணையம் வலியுறுத்தும் அனைத்து அடிப்படை வசதிகளும் இருப்பதாக அறிக்கை அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரும் தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளுக்கு முரணாக அனுமதி சான்றிதழ் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்ட உள்ளது.

இதனையடுத்து, அப்போதைய அமைச்சர் சி.விஜயபாஸ்டர்  அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது, மருத்துவ ஆய்வு குழுவினரை வேல்ஸ் குழுமத்திற்கு சாதகமான அறிக்கையை தயார் செய்ய தூண்டியது போன்ற குற்றத்திற்காக அவர்மீதும், மருத்துமனை சேர்மன் ஐசரி கணேஷ், வேல்ஸ் மருத்துவக்கல்லூரி டீன் சீனிவாசராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேல்ஸ் மருத்துவமனைக்கு சாதகமான மற்றும் பொய்யான அறிக்கையை தயார் செய்த சேலம் மோகன் குமாரமங்கலம் அரச மருத்துவக்கல்லூரி முன்னாள் டீன் பாலாஜி நாதன், பேராசிரியர்கள் மனோகர், சுஜாதா, வசந்தகுமார் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.