சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் வீடுகள் மற்றும் அலுவலகம், சொந்தமான 39 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதல் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
வேலுமணிக்கு சொந்தமான 26 இடங்களிலும், விஜயபாஸ்கருக்கு சொந்தமான 13 இடங்களிலும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் இன்று 3வது முறயைக சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, புதுக்கோட்டை, சேலம் உட்பட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அதிகாரத்தில் இருந்தபோது, புதிதாக தனியார் மருத்துவக் கல்லூரி தொடங்க விதிகளுக்கு முரணாக அனுமதி வழங்கியுள்ளதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சி.விஜயபாஸ்கர் மீதான புகாரில் ஆவணங்களை கைப்பற்ற 13 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறைத் தெரிவித்துள்ளது.
அதேபோல், தெரு விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் அரசுக்கு ரூபாய் 500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகவும், எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதாகவும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது புகார் எழுந்தது. அதன் அடிப்படையில், அவருக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் 5 இடங்களிலும், சேலத்தில் 3 இடங்களிலும், மதுரை, தேனி, புதுக்கோட்டை, திருவள்ளூர், தாம்பரத்தில் தலா ஒரு இடத்திலும் என மொத்தம் 13 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நண்பர் சந்திரசேகர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை, புதுகோட்டை, சேலம், தேனி, மதுரை, திருவள்ளூர், திருச்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட ஊர்களில் 39 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.