சென்னை: முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி. விஜயபாஸ்கர் வீடுகளில் நடத்தப்பட்டு வரும் சோதனைக்கு முன்னாள் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். வாக்குறுதிகளை நிறைவேற்ற திறனில்லாத திமுக அரசு என அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கடும் விமர்சனம். செய்துள்ளார். மின்சார கட்டணம், சொத்துவரி உயர்வு  ஆகியவற்றை மறைப்பதற்காகவே திமுக இந்த சோதனையை மேற்கொண்டு வருகிறது என முன்னாள் அமைச்சர் உதயகுமாரும், எதிர்க்கட்சிகளை செயல்பட விடாமல் தடுக்கவே இந்த சோதனை  என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் குற்றம் சாட்டி உள்ளனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி. விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய 26 இடங்களில், விஜயபாஸ்கர் தொடர்புடைய 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை சுகுணாபுரத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை சோதனை செய்து வரும் நிலையில் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல்  தொண்டாமுத்தூர், வடவள்ளி உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில்  சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் 13 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் செய்தியாளர்கள சந்தித்த முன்னாள் அமைச்சர் திமுக அரசு மீது கடும் விமர்சனங்களை வைத்துள்ளனர். செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், எதிர்க்கட்சிகளை செயல்படவிடாமல் தடுக்கவே அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் திமுக அரசு சோதனை நடத்தி வருகிறது என்றும்,  காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் அதிமுகவை ஒழித்து விட வேண்டும் என்று செயலாற்றுகிறார். எதிர்க்கட்சிகளை செயல்பட விடாமல் தடுக்க நினைக்கின்றனர்.  காவல் துறையை ஏவல் துறையாக பயன்படுத்துகின்றனர். மின்கட்டண உயர்வை மக்கள் மறக்க ரெய்டு நடத்தப்படுகிறது என விமர்சனம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக எம்.பி.யும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசும்போது,  , ‘அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை என்ற பெயரில் எதிர் கட்சிகளை அடக்கலாம் என திமுக அரசு நினைக்கிறது. தந்தை கலைஞர் கருணாநிதி எப்படி பழிவாங்கினாரோ அதே போல அவர் மகனும் செய்கிறார். ‘ ஸ்டாலின் அவர்கள் கூறிய பல்வேறு வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்களுக்கு, வாக்குறுதிகளை நிறைவேற்ற திறனில்லாத திமுக அரசு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு சலுகைகளை, திட்டங்களை இந்த அரசு ரத்து செய்துள்ளாது.  முக்கியமாக தாலிக்கு தங்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்தனை நாள் ஆகியும் மடிக்கணினி வழங்காத அரசு. அதனை கண்டுகொள்ளாமல், பள்ளி கல்வி துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் படத்திற்கு ரசிகர் மன்றம் மூலம் டிக்கெட் விற்கிறார்.

திமுக ஆட்சிக்கு வந்த 15 மாதங்களில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. சொத்து வரி 150 சதவீதம் உயர்ந்துள்ளது. பால்விலை, கட்டுமான பொருட்கள் விலை, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக மின்கட்டணம் மிக பெரிய அளவில் உயர்ந்துள்ளது என கூறினார்.

இதுகுறித்து செய்தியளார்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அரசியல் காழ்புணர்ச்சியின் காரணமாக தான் முன்னாள் அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெறுகிறது. அதிமுகவில் ஓபிஎஸ்க்கு இடம் இல்லை என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பின் மகிழ்ச்சியை மறைப்பதற்காகவும், மின்சார கட்டணம், சொத்துவரி உயர்வு  ஆகியவற்றை மறைப்பதற்காகவும் திமுக இந்த சோதனையை மேற்கொண்டு வருகிறது. எந்த சோதனை மேற்கொண்டாலும் அவை அனைத்தையும் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றும், அதிமுகவில் செல்வாக்கை சரிக்கவே முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை என்றும், கண்ணியமிக்க காவல்துறை திமுக ஆட்சியில் ஏவல் துறையாக மாறி இருக்கிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.