கடலூர்: கடலூரில் பேரூராட்சி நிதி தணிக்கைக்கு வந்த அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வைத்திருந்த பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் மூன்று இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை  நடைபெற்று வருகிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு பேரூராட்சி அலுவலகத்தில் 24ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கணக்கில் வராத ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயைப் பறிமுதல் செய்தனர். சேத்தியாத்தோப்பு தேர்வு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலராகப் பணிபுரிந்து வரும் சீனிவாசன் என்பவர், பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக தன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க, உள்ளூர் தணிக்கைக்குழு உதவி இயக்குநர் பூங்குழலி மற்றும் ஆய்வாளர் விஜயலட்சுமிக்கு லஞ்சம் கொடுக்கவுள்ளதாக, லஞ்ச ஒழிப்புத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சேத்தியாத்தோப்பு பேரூராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். உள்ளாட்சி தணிக்கை செய்ய வந்தபோது அங்கு நடைபெறும் முறைகேடுகளை மறைக்கும் விதமாக லஞ்சம் பெற இருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சோதனையின் போது சேத்தியாத்தோப்பு பேரூராட்சி அலுவலகத்தில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயைக் கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து, சேத்தியாதோப்பு தேர்வு நிலை பேரூராட்சியின் செயல் அலுவலர் சீனிவாசன், உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி இயக்குனர் பூங்குழலி, உள்ளாட்சி நிதி தணிக்கை ஆய்வாளர் விஜயலட்சுமி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து, இன்று, சேத்தியாத்தோப்பு தேர்வு நிலை பேரூராட்சியின் செயல் அலுவலர் சீனிவாசன் வடலூரில் உள்ள வீடு மற்றும் உள்ளாட்சி நிதி தணிக்கையின் உதவி இயக்குனர் பூங்குழலி கடலூர் வீட்டிலும், உள்ளாட்சி தணிக்கை குழுவின் ஆய்வாளர் விஜயலட்சுமியின் வீடு ஆகிய மூன்று இடங்களில் கடலூர் லஞ்ச ஒழிப்பு ஏடிஎஸ்பி தேவநாதன் தலைமையில் போலீசார் மூன்று பிரிவுகளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.