டில்லி
இந்தியாவில் கடந்த ஒரே ஆண்டில் போக்சோ சட்டத்தின் கீழ் 43000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நாடெங்கும் போக்சோ வழக்கில் கைது செய்யப்படுபவர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேசிய குழந்தைகள் காப்பக ஆணையம் இது குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் ஒரு மாணவியை ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் சீண்டல் இல்லை என மும்பை நீதிமன்றம் விடுவித்த நிகழ்வு மக்களுடையே கடும் எதிர்ப்பை சந்தித்தது.
மும்பை நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் யு யு லலித, அஜய் ரஸ்தோகி ஆகியோரின் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் கே கே வேணுகோபால் வாதாடினார்.
அவர் தனது வாதத்தில், “ஒரு பெண்ணின் உடலை மருத்துவ அறுவை சிகிச்சைக்கான கையுறை அணிந்து கொண்டு தொட்டால், மும்பை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அதி கண்டிப்பாக பாலியல் சீண்டலாகக் கருத முடியாது. அதற்காக, அந்த நபரை தண்டிக்கவும் முடியாது.
அதே வேளையில் ஒரு பெண்ணை உடலோடு உடல் தொடும்போது பாலியல் சீண்டல் என்று மட்டுமே சொல்லப்படும். சென்ற ஒரே ஆண்டில் மட்டும் போக்சோ சட்டத்தின் கீழ் 43 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது,’ எனத் தெரிவித்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது மும்பை உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சதீஷ் என்பவர் சார்பில் எந்த வழக்கறிஞரும் வரவில்லை. எனவே அவருடைய சார்பில் வழக்கறிஞர்களில் யாராவது ஒருவரை நியமிக்க உச்சநீதிமன்ற சட்டப்பணிகள் குழுவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கு 2 வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.