சென்னை:
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினர் சா.ஞானதிரவியம் மீது எழுந்துள்ள புகார்கள் தொடர்பாக உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும். இல்லையெனில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நேரிடும் என அவருக்கு திமுக பொதுச்செயலர் துரைமுருகன் கடிதம் அனுப்பியுள்ளார்.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினர் சா.ஞானதிரவியம், தி.மு.க வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும், தி.மு.க-விற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்படுவதாகவும் தலைமைக் கழகத்திற்கு புகார்கள் வந்துள்ளன. அவரது இச்செயல் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், அவப்பெயர் ஏற்படும் வகையிலும் உள்ளதால், இதுகுறித்த அவரது விளக்கத்தினையும் செயல்பாடுகளையும் இக்கடிதம் கிடைத்த ஏழு நாள்களுக்குள் தலைமைக் கழகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவிக்க தவறும்பட்சத்தில் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நெல்லை சி.எஸ்.ஐ அலுவலகத்தை பூட்டு போட்ட நெல்லை எம்.பி ஞான திரவியம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி பாதிரியார் காட்ப்ரே நோபுள் வீடியோ வெளியிட்டார். அவர் மீது ஞானதிரவியம் தரப்பினர் தாக்குதல் நடத்தினர்.

பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளி தாளாளர் மற்றும் திருமண்டல மேல்நிலைப்பள்ளி நிலைக் குழு உறுப்பினர் பதவியில் இருந்து ஞானதிரவியத்தை நீக்கி, தென்னிந்திய திருச்சபையைச் சேர்ந்த நெல்லை திருமண்டல பிஷப் உத்தரவிட்டிருந்த நிலையில், புதிய தாளாளர் ஞானதிரவியம் தரப்பினர் இடையே மோதல் நடைபெற்றிருந்தது.