கோவை:
நாடு முழுவதும் நேற்றுமுதல் (25.5.2020) முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில், தமிழகஅரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி, இபாஸ் பெறாமல்  டெல்லியில் இருந்து கோவை விமானநிலையம் வந்த 4 பயணிகள் மீண்டும் டெல்லிக்கே திருப்பி அனுப்பப்பட்டனர்.

கடந்த 2 மாதங்களாக கொரோனா ஊரடங்கு நீடித்து வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றன. அதன்படி, நேற்று முதல் நாடு முழுவதும் உள்நாட்டு விமான சேவை பல்வேறு நெறிமுறைகளுடன் நடைபெற்று வருகிறது.
வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்து உள்ளது. அதன்படி,  விமானத்தில் வரும் பயணிகள் நேரடியாக வீட்டிற்கு செல்லாமல் கொரோனா பரிசோதனை முடிந்த பிறககே  வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள், அதுவரை அரசின் கட்டுப்பாட்டில் தனிமைப்படுத்தப்படுவார்கள். மேலும், கையில் சீல் வைக்கப்படும், வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும், மேலும் இ பாஸ் பெறுவதும் கட்டாயம் என தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இன்று காலை டெல்லியில் இருந்து கோவை வந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளில்  4 பயணிகளிடம் இ பாஸ் இல்லாதது தெரிய வந்தது. இதனால், அவர்களை விமான நிலையத்தை விட்டு வெளியே வர அனுமதி மறுத்த காவல்துறையினர்,  அவர்கள் 4 பேரையும்  மீண்டும் அதே விமானத்தில் திருப்பி அனுப்பி வைத்தனர்.