டில்லி
குடியரசு தினத்தை முன்னிட்டு டில்லியில் வரும் பிப்ரவரி 15 வரை டிரோன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் டில்லியில் குடியரசுதின விழா பிரமாண்டமாகக் கொண்டாடப்படுவது வழக்கமாகும் அன்று நடக்கும் ஊர்வலத்தை வெளிநாட்டில் இருந்து வரும் முக்கிய விருந்தினர் உட்படப் பல தலைவர்கள் கண்டு ரசிப்பார்கள்.
இந்த ஆண்டு குடியரசு தின விழா நெருங்கி வரும் நிலையில் டில்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டில்லியில் டிரோன்கள், ஆளில்லா விமானங்கள் உள்ளிட்டவை பறக்கத் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
டில்லி காவல்துறை இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“குடியரசு தின விழாவை முன்னிட்டும் பாதுகாப்பு கருதியும் டில்லி வான் பரப்பில் டிரோன்கள், ஆளில்லா விமானங்கள், பாரா கிளைடர்கள், வெப்பக்காற்று பலூன்கள், குவாட்காப்டர்கள் உள்ளிட்ட அனைத்து பறக்கும் பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும்”
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.