டில்லி
இந்த கணக்கு வருடத்தில் இந்தியப் பொருளாதாரம் 10% மேல் வீழ்ச்சி அடையும் என முன்னாள் நிதிச் செயலர் எஸ் சி கர்க் அறிவித்துள்ளார்.
கொரோனா பரவுவதை கட்டுக்குள் கொண்டு வர நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25 முதல் பிரதமர் மோடி 21 நாட்கள் முழு ஊரடங்கை அறிவித்தார். ஆனால் கொரோனா வைரஸ் பரவுதலைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாததால் அந்த ஊரடங்கு அதன் பிறகு மே 3 வரை, அதற்கு அடுத்ததாக மே 17 வரை மற்றும் மே 31 வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது அதிக பாதிப்புள்ள பகுதிகளில் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் நாட்டில் அனைத்து தொழில் மற்றும் வர்த்தகம் முழுவதுமாக முடங்கியது. ஏற்கனவே சரிவில் இருந்த இந்தியப் பொருளாதாரம் மேலும் சரிவைச் சந்திக்கத் தொடங்கியது. இதையொட்டி பிரபல கணக்கெடுப்பு நிறுவனங்களான ஃபிட்ச், கிரைசில் போன்ற நிறுவனங்கள் இந்தியாவின் ஜிடிபி கடுமையாகக் குறைந்து இதனால் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் என எச்சரித்தன.
சென்ற ஏப்ரல் மாதம் ஃபிட்ச் நிறுவனம் இந்த 2020-21 கணக்கு வருடத்தில் பொருளாதார வீழ்ச்சி 0.8% ஆக இருக்கும் என முதலில் தெரிவித்து இருந்தது. ஆனால் தொடரும் ஊரடங்கால் இந்த வீழ்ச்சி 5% வரை அதிகரிக்கும் எனத் தெரிவித்தது. கிரைசில் நிறுவனம் முதலில் 1.8% வரை இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் எனக் கூறி இருந்த நிலையில் அதன் பிறகு வீழ்ச்சி 5% வரை அதிகரிக்கும் எனக் கணக்கிட்டுக் கூறியது.
இந்நிலையில் முன்னாள் நிதிச் செயலர் சுபாஷ் சந்திர கர்க், “இந்தியாவில் மிகக் குறைந்த அளவில் பாதிப்பு இருந்த போது நாடு முழுவதும் ஊரடங்கு கொண்டு வந்ததால் பொருளாதாரத்திலும் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மூன்று வாரத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தி விடலாம் என்னும் தவறான நம்பிக்கையில் கொண்டு வரப்பட்ட ஊரடங்கு இந்தியப் பொருளாதார வீழ்ச்சியை மேலும் அதிகரித்து விட்டது.
இதைச் சரி செய்ய மத்திய அரசு ரூ.21 லட்சம் கோடி நிவாரண உதவியை அறிவித்தது. ஆனால் அந்த உதவியின் மொத்த மதிப்பு ரூ.1.4 முதல் ரூ.1.5 லட்சம் கோடி மட்டுமே ஆகும். இது இந்திய ஜிடிபியில் 0.7% மட்டுமே ஆகும். இந்த உதவியால் நிச்சயம் இந்தியப் பொருளாதார வீழ்ச்சியைத் தடுக்க முடியாது. கடந்த 40 வருடங்களில் இல்லாத அளவுக்கு 2020-21 ஆம் வருடம் ஜிடிபி கடும் வீழ்ச்சியைச் சந்திக்கும்.
இந்த வருமான இழப்பின் மதிப்பு சுமார் ரூ.20 லட்சம் கோடி ஆக இருக்கும். ஏற்கனவே பலர் கூறியது போல இல்லாமல் இது 10% பொருளாதார வீழ்ச்சியாகும். இதற்கு முக்கிய காரணம் தவறாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கே ஆகும். கடந்த 11 வருடங்களாகக் குறைந்து வரும் இந்தியப் பொருளாதார வளர்ச்சி தற்போது மிகவும் வீழ்ச்சி அடைய அதிக வாய்ப்புள்ளது. ” எனத் தெரிவித்துள்ளார்.