ஏடாகூடமான விருந்தாளி… கதறும் டெல்லி ஏர்போர்ட்..
ஸ்டீபன் ஸபீல்பெர்க் இயக்கத்தில் டாம் ஹான்க்ஸ் நடிச்சு 2004-ல் வெளியான படம் “தி டெர்மினல்”. இந்த படத்தில் டாம் ஹான்க்ஸ் அவர் ஊர்ல நடக்கும் உள்நாட்டு போரால அவரோட பாஸ்போர்ட் செல்லாம போய் நியூயார்க் ஏர்போர்ட்லயே ஒரு வருசம் வரை வாழ வேண்டியதாகிடும்.
இதே மாதிரியான ஒரு சுவாரஸ்யமான சம்பவம் எட்கார்ட் சிபார்ட் என்கிற 40 வயதான ஜெர்மெனிக்கார்ருக்கு நம்ம டில்லி ஏர்போர்ட்டில் நடந்திருக்கு.
மார்ச் 18-ம் தேதி, எட்கார்ட் நியூ டெல்லி வழியாக இஸ்தான்புல் போயிட்டு இருந்திருக்கார். அன்றைக்கு தான் இந்தியா கொரோனா தொற்று காரணமாக எல்லா வெளிநாட்டு விமானங்களையும் ரத்து செய்திருந்தது. எட்கார்ட்டிடம் இந்திய விசா இல்லாத நிலையிலும் தி டெர்மினல் படத்தில வரது மாதிரியே ஏர்போர்ட் லாஞ்சில தங்கிகொள்ள அவருக்கு அனுமதி குடுத்தாங்க நம்ம அதிகாரிகள். ஆனா அவர் ஏர்போர்ட்டை விட்டு எப்போதும் வெளிய போகக்கூடதுங்கிற நிபந்தனையோட. மார்ச் 18-லிருந்து எட்கார்ட் டெல்லி ஏர்போர்ட் லாஞ்ச்லதான் தங்கியிருக்கார்.
இவரை ஜெர்மன் அனுப்ப நம்ம அதிகாரிகள் எடுத்த அத்தனை முயற்சிகளும் வீணாகிடுச்சு. ஏன்னா ஜெர்மன்ல இவர் மேல ஏற்பட்ட கிரிமினல் கேஸ்கள் பதிவாகியிருக்காம். சரி துருக்கி அனுப்பலாம்னு நினைச்சாலும் அவங்களும் வெளிநாட்டினர் யாரையும் அனுமதிக்க மறுத்துட்டாங்க.
இவர்கிட்ட போய் ஜெர்மன் போறதை பத்தி பேசினாலே கோபத்தில கத்துறாராம். “நான் ஏன் ஜெர்மன் போகணும். நான் இங்கேயே இந்தியாலயே, இந்த ஏர்போர்ட்.லயே இருந்துக்கிறேன். என்னை வற்புறுத்தாதீங்க. எனக்கு இந்தியாவை ரொம்ப பிடிச்சருக்கு” அப்டிங்கிறாராம்.
“மனிதாபிமான அடிப்படையில் தான் இவரை இங்க தங்க அனுமதிச்சு தினமும் சாப்பாடும் குடுத்திட்டு இருக்கோம். அவருக்கு வேண்டிய வசதிகளையும் செஞ்சு தரோம். ஆனா சம்பந்தப்பட்ட நாட்டின் அதிகாரிகளுடன் பேசிட்டு தான் இருக்கோம். நிலைமைகள் சரியானதும் விரைவில் இவரை அனுப்பி வெச்சிடுவோம்” என்கிறார் டெல்லி ஏர்போர்ட் செய்தி தொடர்பாளர்.
ஒரே ஒரு பேக்கை மட்டுமே வெச்சுக்கிட்டு கிட்டத்தட்ட 25 நாட்களுக்கும் மேலாக இப்டி ஏர்போர்ட் லாஞ்ச்ல தங்கியிருக்கும் எட்கார்ட் உண்மையில் விசித்திர மனிதன் தான்.
– லட்சுமி பிரியா