சானியா, டவுசரை கொடு.. சானியாவே கொடுத்த, ‘அடேய்’ ரியாக்சன்…

கொரோனாவை பற்றி, தொடர்ந்து ஊரடங்கு பற்றி மற்றும் இவை சார்ந்த சின்ன சின்ன விசயங்களையும் கூட விட்டு வைக்காமல் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களும், டிக்டாக் போன்றவற்றில் கேலி, கிண்டல், காமெடி வீடியோக்களும் தொடர்ந்து வந்து வைரலாகி அனைவரையும் சிரிக்க வைத்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் ஒரு சில படைப்பாளிகளின் கற்பனை பதிவுகள் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்று ஆச்சர்யப்படுத்தவும் தவறவில்லை.

அப்படியான ஓர் டிக்டாக் வீடியோ தான் கேரள மாநிலம் கோழிக்கோட்டின் அருகேயுள்ள ஓர் கிராமத்தைச் சேர்ந்த பினீஷ் மற்றும் அவரது உறவினர் ஜோபின் லோஹி இருவராலும் மலையாளத்தில் வெளியிடப்பட்டு நாடுகள் கடந்து பிரபலமான ஒன்று.

இந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் கடைக்குச் சென்று, கையிலிருக்கும் பேப்பரை பார்த்து, “சானியா டவுசர் ஒன்னு குடுங்க” என்று கேட்க, கடைக்காரர் அதிர்ச்சியடைந்து, “தம்பி… அது சானியா டவுசர் இல்ல… சானிடைசர்.. இந்தாங்க” என்று கூறி சானிடைசரை தருகிறார்.

இந்த வீடியோ பயங்கர வரவேற்பினை பெற்று அதிக எண்ணிக்கையில் வைரலானதுடன், டென்னிஸ் ஸ்டார் சானியா மிஸ்ராவிடமிருந்தே சிரிக்கும் ஈமோஜியினை பெற்று அசத்தியிருக்கிறது.

“சானியா மிர்ஸான்னு முழுப்பெயரையும் சொல்றா மாதிரி மாத்திடலாமானு யோசிச்சுக்கிட்டு இருக்கும் போதே அந்த வீடியோ பயங்கர வைரலாகிடுச்சு.  அப்டியே விட்டுட்டோம்.  ஆனா சானியாவிடமிருந்தே பாராட்டு கிடைச்சது ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு” என்று சிரிக்கிரார் பினீஷ்.

“எங்க கிராமத்தில் சானிடைசர்னா என்னாங்கிறதே அந்த கொரோனாவுக்கு அப்புறமா தான் நிறைய பேருக்கு தெரிய வந்தது.  யார் மனசையும் புண்படுத்தாம இந்த சானடைசரை பற்றி ஓர் விழிப்புணர்வு ஏற்படுத்த நாங்க காமெடியா யோசிச்சது தான் இந்த வீடியோ.  இப்போ அடுத்து மாஸ்க் பற்றி பதிவு செஞ்ச வீடியோவும் கிட்டத்தட்ட ஒரு மில்லயன் பார்வையாளர்கள கடந்திருக்கு” என்று பெருமையடைகிறார்கள் இருவரும்.

– லெட்சுமி பிரியா