இனி பீகாரை விட்டு செல்ல மாட்டோம் : பீகார் மாநில தொழிலாளர் கதறல்

Must read

பாட்னா

ரடங்கால் வெளி மாநிலங்களில் சிக்கி இருந்த பீகார் மாநில தொழிலாளர்கள் சொந்த  மண்ணை அடைந்ததும் உணர்ச்சி வசப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு காரணமாகப் பல வெளி மாநிலத்  தொழிலாளர்கள் தாங்கள் பணி செய்யும் மாநிலங்களை விட்டு வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர்.   இவர்களில் பெரும்பாலானோர் வட மாநிலங்களான பீகார், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.  இவர்களில் பெரும்பாலானோர் கட்டுமான தொழிலில் உதவியாளர், மேஸ்திரி போன்ற பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

ஊரடங்கால் இவர்களது பணி நின்று போனதால் இவர்கள் தங்க இடம் மற்றும் உணவின்றி மிகவும் துயருற்றனர்.  ஊரடங்கு முதல் முறை நீட்டிக்கப்பட்டதும் இவர்கள் துயர் அதிகரித்தது.  அதன் பிறகு இரண்டாம் முறை மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  தற்போது மாநில அரசு இவர்களை அந்தந்த மாநில அனுமதியுடன் சொந்த ஊருக்கு அனுப்பலாம் என மாநில அரசுகளுக்குப் பரிந்துரை செய்தது.  இவர்களுக்காகச் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அவ்வகையில் பீகார் மாநிலத்துக்கு சுமார் 1.5 லட்சம் தொழிலாளர்கள் இதுவரை திரும்பி வந்துள்ளனர்.  ஜெய்ப்பூரில் இருந்து வந்துள்ள அருண்குமார் என்னும் 30 வயது இளைஞர் ரயில் பீகார் தலைநகர் பாட்னா வந்ததும் கதறி அழுதுள்ளார்.  இது தங்களுக்குக் கிடைத்துள்ள ஒரு புதிய வாழ்க்கை எனவும்  ஊரடங்கு நேரத்தில் பட்ட துயரைப் பார்க்கும் போது மீண்டும் மாநிலத்தை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து 20 பேர் கொண்ட குழு ஒன்று வந்து இறங்கியதும் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் பீகார் மண்ணை முத்தமிட்டுக் கதறி உள்ளனர்   இது குறித்து சமூக ஆர்வலரான ஆர் கே வர்மா, “இவ்வாறு மக்கள் உணர்ச்சி வசப்படுவது சகஜமான ஒன்றாகும்.  அரசு இவர்களுக்குப் பீகார் மாநிலத்திலேயே பணி புரிய வாய்ப்பளித்தால் அது இவர்களுக்கு நல்ல ஊக்கம் அளிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article