டில்லி

ந்திய வானிலை ஆய்வு  மையம் இன்று முதல் 5 நாட்களுக்கு மிக கனமழை காரணமாக கேரளாவில் ஒரு சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரளாவில் கடந்த சில தினங்களாக பருவமழை தீவிரமாகி உள்ளது.   இதையொட்டி இந்திய வானிலை ஆய்வு மையம் கேரளாவில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிகவும் கனத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.   கடற்பரப்பு மோசமாக இருக்கும் எனவும் காற்றின் வேகம் அதிகரிக்கும் எனவும் மையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் வரும் ஜூலை 20 ஆம் தேதி வரை இடுக்கி மாவட்டத்துக்கும், ஜூலை 19 வரை பட்டனம் திட்டா மற்றும் கோட்டயம் மாவட்டங்களுக்கும் 20 ஆம் தேதி அன்று எர்ணாகுளத்துக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  இந்த தினங்களில் மிகக் கன மழை பெய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ரெட் அலர்ட் விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் 20 செ மீக்கும் அதிகமான அளவில் மழை பெய்யலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.  அதை ஒட்டி இந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.