புவனேஸ்வர்

ஒடிசா மாநிலத்தில் பெய்து வரும கனமழையால் இருப்புப் பாதைகளில் வெள்ளம் சூழ்ந்து சரக்கு ரயில் தடம் புரண்டு நதியில் முழுகி உள்ளது.

கடந்த சில தினங்களாக ஒடிசாவில் கனமழை பெய்து வருகிறது.  மாநிலம் எங்கும் வெள்ளம் பெருகி வருகிறது.  பல இடங்களில் குடியிருப்பு பகுதிகள் முழுகி உள்ளன.  பேரிடர் மீட்பு படையினர் வெள்ளத்தில் சிக்கி உள்ள மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர்.  மாநிலத்தில் பல பகுதிகளில் மேலும் வெள்ளம் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

பிரோஸ்பூரில் இருந்து கோதுமை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் ஒன்று அல்குர் அருகே பயணம் செய்த போது தண்டவாளத்தில் வெள்ளநீர் புகுந்து ஓட்டுநரால் எதையும் காணமுடியாத நிலை ஏற்பட்டது.  அந்த ரயில் நந்திரா நதியின் மீது தடம்புரண்டு நதியில் விழுந்து மூழ்கின.   இதையடுத்து ரயில்வே நிர்வாகம் 12 ரயில்களை ரத்து செய்துள்ளது.  மேலும் 8 ரயில்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.

ரயில்வே விபத்து நிவாரண வாகனம் சம்பவ இடத்துக்கு விரைந்து  வந்து நதியில் மூழ்கிய ரயில் பெட்டிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.  இந்த விபத்தில் எஞ்சினுக்கோ மற்றும் ஓட்டுநருக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.   இருப்புப் பாதைகள் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியதே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்