திருச்சி

வெள்ளப்பெருக்கு காரணமாகக் கொள்ளிடம் ஆற்றில் ஆடிப்பெருக்கு கொண்டாடியவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு கர்நாடகாவில் பெய்து வரு கடும் மழை காரணமாகக் காவிரி ஆற்றில் அதிகமாக நீர் வெளியேற்றப்பட்டது.   இதனால் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  பிறகு நீர் திறப்பு குறைக்கப்பட்டதால் வெள்ளம் குறைந்தது.  தற்போது கர்நாடகாவில் மீண்டும் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணை நிரம்பி அதிக அளவில் நீர் திறக்கப்பட்டு கொள்ளிடத்தில் இன்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் வகையில், ஒலிபெருக்கிகள் மூலம் கொள்ளிட கரையோரப் பகுதிகளில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது.  ஒலிபெருக்கிகள் மூலம் திருவைகாவூர், குடிதாங்கி போன்ற பகுதிகளில் வருவாய்த் துறையினர் கொள்ளிடம் ஆற்றின் வெள்ள எச்சரிக்கையை மக்களுக்குத் தெரிவித்துள்ளனர்.

இன்று சற்று நேரத்திற்கு முன்பு திருவைகாவூர் கொள்ளிடம் ஆற்றில் ஆடிப்பெருக்கு கொண்டாடிய நபர்களைக் கும்பகோணம் கோட்டாட்சியர் எச்சரித்து ஆற்றில் இருந்து வெளியேற்றினார்.  கொள்ளிடம் ஆற்றில் தற்போது சுமார் 70 ஆயிரம் கன அடி நீர் செல்கிறது. மேலும் இன்று மாலை முதல் 1 லட்சம் கன அடி நீர் கொள்ளிடம் ஆற்றில் செல்லும் என்பதால், ஆற்றில் இறக்குவதற்கோ, கால்நடைகளை மேய்ப்பதற்கோ யாரும் வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.