சென்னை

மிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனை  விடப்பட்டுள்ளதால் விற்பனை அதிகரித்துள்ளது.

நாளை மறுநாள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.  மாநிலம் எங்கும் இன்று இரவுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது.    இன்று இரவு 7 மணிக்கு மேல் அனைத்துக் கட்சிகளுக்கும் பிரசாரம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.   தொகுதியைச் சேராத வெளியூர் ஆட்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் எனஎச்சர்க்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன.    இதனால் நேற்று இரவு வரை டாஸ்மாக் கடைகளுக்கு ஏராளமான மதுப்பிரியர்கள் படை எடுத்ததால் அமோக விற்பனை ஆகி உள்ளது.   பல கடைகளில் நீண்ட வரிசைகளில் காத்திருந்த மதுப்பிரியர்கள் மது வாங்கிச் சென்றனர்.

ஆயினும் சில கடைகளில் கொரோனாவுக்கான தனி மனித இடைவெளி கடைப்பிடிக்கப்படாமல் ஒருவரை ஒருவர் முண்டியடித்து மது வாங்கும் நிகழ்வுகளும் நடந்துள்ளன.  பல இடங்களில் காவல்துறையினர் வந்து கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நிலை உண்டானது.  குறிப்பாகப் புதுக்கோட்டையில் மதுக்கடைகள் மூடிய பிறகும் மது வாங்க நின்றிருந்த மக்களை காவல்துறையினர் கலைந்து போக செய்துள்ளனர்.

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று முதல் கள்ளச்சந்தையில் விற்பதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.   குறிப்பாக ஸ்ரீவில்லிப்புத்தூரில்  ஒரு வீட்டில் 1500 மது பாட்டில்களும், திருப்பூர் மாவட்டத்தில் ஒரு காரில் 480 மது பாட்டில்களும், வேலூரில் 250 மதுபாட்டில்களும் பிடிபட்டுள்ளன.