சென்னை
சென்னை உயர்நீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வு இரு மாறுபட்ட தீர்ப்புகள் வழங்கியதால் சவுக்கு சங்கர் வழக்கு மூன்றாம் நீதிபதிக்கு மாற்றப்பட உள்ளது.
பிரபல யூடியூப்ர் சவுக்கு சங்கர் பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது கஞ்சா உள்ளிட்ட வழக்குகளும் பாய்ந்து குண்டர் தடுப்பு சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் குண்டர் தடுப்பு சட்ட உத்தரவை ரத்து செய்து தனது மகனை விடுவிக்க வேண்டும் எனக்கோரி சவுக்கு சங்கரின் தாயார் கமலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களையும் நேற்று தாக்கல் செய்ய சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிட்டனர்.
சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான அசல் ஆவணங்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டது அசல் ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதிகள், இறுதி விசாரணை இன்று நடைபெறும் என தெரிவித்தனர். இன்று அதன்படி வழக்கின் இறுதிவிசாரணை நடைபெற்றபோது இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பளித்து உத்தரவிட்டனர்.
நீதிபதி சுவாமிநாதன் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். நீதிபதி பாலாஜி தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்த பிறகு ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க உத்தரவிட்டார். இத்தக்கைய மாறுபட்ட தீர்ப்பு காரணமாக வழக்கை 3வது நீதிபதி விசாரிக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது
அதே வேளையில் சவுக்கு சங்கரை கோவை சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்ற இரு நீதிபதிகளும் ஒருமித்த கருத்தில் உத்தரவிட்டுள்ளனர்.