பர்கூர், ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பர்கூரில் சாலை வசதி சீராக உள்ளாததால் ஆம்புலன்ஸ் இல்லாமல் துணித் தூளியில் கர்ப்பிணிப் பெண்ணை எடுத்துச் சென்றுள்ளனர்.
நாடெங்கும் சாலை வசதிகள் மேம்பாடு நடந்துள்ளதாகவும் அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய மாநில அரசுகள் தெரிவிக்கின்றன. அத்துடன் ஆம்புலன்ஸ் வசதி எந்த நிமிடமும் கிடைக்கும் என அரசு பல முறை அறிவித்துள்ளது. ஆனால் தற்போது நமது தமிழகத்தில் அதற்கு நேர்மாறான நிகழ்வு நடந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் பர்கூர் பகுதியில் உள்ள பல மலைக் கிராமங்களுக்குச் சரியான சாலை வசதிகள் இல்லாத நிலை உள்ளது. ஏற்கனவே உள்ள சாலைகளும் வாகனங்கள் செல்ல வகை இல்லாத நிலையில் உள்ளது. இந்தப் பகுதியில் வாழும் மக்கள் இதனால் கடும் துயருற்று வருகின்றனர்.
நேற்று இந்தப் பகுதியில் உள்ள ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்குப் பிரசவ வலி கண்டதினால் ஆம்புலன்சை அழைத்துள்ளனர். சாலை வசதி சரி இல்லாத காரணத்தால் ஆம்புலன்ஸ் வரவில்லை எனக் கூறப்படுகிறது. அதையொட்டி கிராம வாசிகள் துணியில் தூளி (தொட்டில்) செய்து அதில் அந்த பெண்ணை 6 கிமீ தூரம் சுமந்து சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அந்த பெண்ணுக்கு மருத்துவமனை செல்லும் வழியில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது தாய் சேய் இருவரும் நலமாக மருத்துவமனையில் உள்ளனர். இந்த பதிவு வீடியோவில் பதியப்பட்டு டிவிட்டரில் வந்துள்ளது. பலரும் அந்த வீடியோவை பதிந்ததால் தற்போது அது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோ நமது வாசகர்களுக்காக இதோ
[youtube https://www.youtube.com/watch?v=QfNNc88WFjk?feature=youtu]