துபாயில் பிரமாண்டமான இந்து கோவில் அக்டோபர் 4ந்தேதி (நேற்று) திறக்கப்பட்டு உள்ளது. ஐக்கிய அரபு அமீரக அமைச்சர் திறந்து வைத்தார். இந்த கோவிலில் இன்றுமுதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

துபாயின் ஜபேல் அலி பகுதியில்உள்ள பழமையான கோவிலை புதுப்பிக்கும் வகையில், கடந்த 2020 ஆண்டு  அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த கோவில் சிந்தி குரு தர்பாரின் மிக பழமை வாய்ந்த கோயிலாகும்.  அதன்படி, இந்த கோவில்  148 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வந்த நிலையில், அதன் பணிகள் நிறைவடைந்தது. இந்த  இந்து கோயிலை, ஐ க்கிய அரபு அமீரக அரசின் சகிப்புத்தன்மைத்துறை அமைச்சர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் நேற்று திறந்து வைத்து கோவிலை பார்வையிட்டார். இந்த விழாவில் அந்நாட்டு அரசின் உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து இன்று முதல் அந்த கோயிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.

இந்த கோயில் அழகிய பளிங்குக் கற்களால் கட்டப்பட்டுள்ளதுடன், ஏராளமான  தூண்கள் மற்றும் முகப்பு பகுதி அரபு மற்றும் இந்து முறைப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரார்த்தனை மண்டபத்தில் இளம் சிவப்பு தாமரை முப்பரிமாண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஏராளமான மணிகளும் அங்கு தொங்க விடப்பட்டுள்ளன. கோவிலின் உட்புறத்தில் 16 தெய்வங்கள் இடம் பெற்றுள்ளதாகவும், அனைத்து மதத்தினர் வழிபாடு நடத்தவும், மற்றும் பிற பார்வையாளர்களுக்கும் இங்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த கோவிலை பார்வையிட முன்பதிவு அவசியம் என்றும், அதற்காக கிஆர்கோடு முறை கொண்டு வரப்பட்டு உள்ளது. கோவிலானது காலை 6:30 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.