துபாய்

ல்யாண் ஜுவல்லரி மிகவும் புகழ்பெற்ற நகை வர்த்தக நிறுவனம் ஆகும்.   இந்தியாவில் மட்டும் இன்றி வெளிநாடுகளிலும் இந்த நிறுவனத்துக்கு கிளைகள் உள்ளன.   அதே நேரத்தில் இந்த நிறுவனம் விற்பனை செய்யும் நகைகளைக் குறித்து பல தகவல்கள் சமூக வலைத் தளங்களில் வெளியாகி வருகின்றன.   அவைகளில் பெரும்பாலானவை வதந்திகள் என்றே கூறப்படுகின்றன.

இந்நிலையில் துபாயில் உள்ள கல்யாண் ஜுவல்லர்ஸ் விற்பனை செய்யும் தங்க நகைகளில் கலப்படம் அதிகம் உள்ளதாக செய்திகள் சமூக வலை தளங்களில் பரவின.   அத்துடன் கல்யாண் ஜூவல்லர்ஸ் உரிமையாளர்களில் ஒருவர் இதற்காக கைது செய்யப்பட்டுவிட்டதாக வதந்திகளும் பரவின.  இது குறித்து துபாய் காவல்துறையினரிடம் உரிமையாளர்கள் புகார் அளித்துள்ளனர்.

அத்துடன் தற்போது வாட்ஸ்அப்  செயலியில் ஒரு செய்தி பரப்பப்பட்டு வருகிறது.  அதில் கல்யாண் நிறுவனத்தின் பில் மற்றும் நகை பதியப்பட்டுள்ளது.  மேலும் அந்த புராதன வகை நகையில் எக்கச்சக்கமாக அரக்கு இருந்ததாக அந்தப் பதிவில் சொல்லப்பட்டிருந்தது.    இது குறித்தும் நிறுவனம் புகார் அளித்தது.

இந்த புகாரை விசாரித்த துபாய் காவல்துறையினர் ஐந்து இந்தியர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.   இவர்கள் மீது சைபர் கிரைம் பிரிவின் கீழ் சமூக வலைதளத்தின் மூலம் அவதூறான செய்தியை பரப்புவதாக வழக்கு பதிந்துள்ளது.   இந்த ஐவரிடமும் தொடர்ந்து துபாய் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் கல்யாண் ஜுவல்லர்ஸ் உரிமையாளர்களில் ஒருவரான ரமேஷ் கல்யாணராமன், “எங்களது தங்க நகைகள் போலியானவை அல்ல.  எந்த ஒரு கலப்படமும் இவைகளில் கிடையாது.    புராதன வகை நகைகள் செய்யும் போது அவைகள் நசுங்காமல் இருக்க உள்ளே சிறிதளவு அரக்கு ஊற்றப்படுவது வழக்கமே.   இதை நாங்கள் அறிவித்து இருக்கிறோம்.

இதை திரித்துக் கூறி சிலர் எங்கள் வாடிக்கையாளர்களிடையே தேவையற்ற அச்சத்தை உண்டாக்கி உள்ளனர்.   இதனால் எங்கள் நிறுவனப் பெயர் மட்டுமின்றி அனைத்து நகை உற்பத்தியாளர்களின் நற்பெயரும் பாழாகிறது.  அதனால் தான் நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்தோம்”  எனக் கூறி உள்ளார்.