சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல பார் ஒன்றின் மேனேஜர் மற்றும் டி.ஜே. ஆகியோரை சென்னை காவல்துறையின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு புலனாய்வு துறையினர் (Anti-Narcotics Intelligence Unit – ANIU) கைது செய்துள்ளனர்.

நுங்கம்பாக்கத்தில் உள்ள தி தீஃப் பாரில் பணியாற்றும் டிஜே ஜூலியன் டிஷான் (33) மற்றும் மேலாளர் எம். அருண்ராஜ் (29) ஆகியோர் பாருக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கு கோகைன் விநியோகம் செய்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

முன்னதாக, கோகைன் வைத்திருந்ததாகவும், அந்த வலையமைப்பில் ஈடுபட்டதாகவும் கூறி சில நாட்களுக்கு முன்பு வி. புருஷோத்தமன் (32) மற்றும் ராம்குமார் ராஜு (37) ஆகியோரை அதிகாரிகள் கைது செய்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து போதைப் பொருளை பெற்றது தெரியவந்தது.

ஜனவரி 25ம் தேதி துவங்கிய இந்த கைது மற்றும் விசாரணை நடவடிக்கையைத் தொடர்ந்து மும்பையில் பதுங்கி இருந்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த எகோ நதானியால் சிபுசோரை மும்பை ANIU போலீசார் கைது செய்துள்ளனர். போலீஸ் குழு அவரிடமிருந்து ஐந்து கிராம் கோகைனை மீட்டது.

கைது செய்யப்பட்ட நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபரை சென்னை கொண்டுவர தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரை இவர்களிடம் இருந்து 60 கிராம் கோகைன், 1.7 கிலோ கஞ்சா, இரண்டு கிராம் கஞ்சா எண்ணெய், நான்கு கிராம் OG கஞ்சா, 16 மொபைல் போன்கள், மூன்று இரு சக்கர வாகனங்கள், மூன்று கார்கள் மற்றும் இரண்டு எடை இயந்திரங்கள் ஆகியவற்றை சென்னை காவல்துறை மீட்டுள்ளது.

“சென்னையில் உள்ள பார்கள், பப்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் சட்டவிரோத நடவடிக்கைகள் நடைபெறுகிறதா என்பதை சரிபார்க்க ANIU குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது” என்று தெரிவித்துள்ள அதிகாரிகள், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹோட்டல் நிர்வாகங்களை எச்சரித்துள்ளதாகத் தெரிவித்தனர்.