சென்னை: போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் விவகாரம் தொடர்பாக, இயக்குநர் அமீரை மீண்டும் விசாரணைக்கு  வரும்படி, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது.

தலைநகர் டெல்லியில், கடந்த மாதம்,  சுமார் 2000 கோடி மதிப்பிலான கடத்தல் போதைப் பொருள் சிக்கியது. இதில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளியான, தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும்,     திரைப்பட தயாரிப்பாளரும் ,  சென்னை மேற்கு மாவட்ட திமுக அயலக அணி அமைப்பாளரும் ஆக இருந்த ஜாபர் சாதிக் தலைமறைவானார்.  இதையடுத்து அவரை திமுக தலைமை கட்சியில் இருந்து நீக்கியது. இதற்கிடையில் தேடப்பட்டு வந்த ஜாபர் சாதிக், வெளிநாடு தப்பிச்செல்ல முயற்சித்தபோது, போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளால்  கடந்த மார்ச் 9ம் தேதி கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்பேரில், பலரிடம் போதை பொருள் தடுப்பு துறை, அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறது.

ஏற்கனவே ஜாபர் சாதிக், போதைபொருள் மூலம் கிடைத்த பணத்தில், அரசியல் கட்சிகளுக்கு நிதி, திரைப்பட தயாரிப்பு, ஓட்டர் நிர்வாகம் பல தொழில்களில் முதலீடு செய்துள்ள நிலையில், இவர் தயாரித்த இறைவன் மிகப்பெரியவன் என்ற படத்தை இயக்குனர்  அமீர் இயக்கியிருந்தார். இதன் காரணமாக இயக்குநர் அமீருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஏப்ரல் 2ந்தேதி டெல்லியில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இயக்குநர் அமீர் ஆஜராகினார். அவரிடம் ஜாபர் சாதி தொடர்பாக 11 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள், ஜாபர் சாதிக், அமீர்  போன்றோரின் அலுவலகம் வீடு உள்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில்  சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த பரபரப்பான சூழலில்,  அமீர் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு இயக்குனர் அலுவலகம்  சம்மன் அனுப்பி உள்ளது. அதில்,  2020ஆம் ஆண்டு முதல் 2023 வரை அமீர் பெயரில் வாங்கப்பட்டுள்ள சொத்துக்கள், வங்கி கணக்கு ஆவணங்கள் கேட்கப்பட்டுள்ளது. ஜாபர் சாதிக்குடன் தொழில் பார்ட்னராக இணைந்தது எப்படி? என்ற விவரங்களும் கேட்கப்பட்டுள்ளது.

இந்த பதிலளிக்க கால அவகாசம் கேட்டு என்சிபி அதிகாரிகளுக்கு அமீர் கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.