சென்னை,

மிழகத்தில் பருவமழை பொய்த்து போனதால் சென்னைக்கு உள்பட மாநிலம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது.

சென்னையிலும் குடிதண்ணீருக்கு மக்கள் அல்லாடி வரும் நிலையில், சென்னை அருகே உள்ள குவாரிகளில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டுவர தமிழக குடிநீர் வாரியம் ஏற்பாடு செய்து வருகிறது.

சென்னைக்கு  குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் போதிய தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது.

இதையடுத்து மாற்று வழியாக சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் தேங்கி கிடக்கும் தண்ணீரை சுத்தப்படுத்தி குடிநீருக்கு பயன்படுத்த முடியுமா? என ஆய்வுகள் நடைபெற்று வந்தது.

இதற்காக சென்னையை அடுத்த மாங்காடு பகுதியில் 22 கல்குவாரிகள், திருநீர்மலை, பம்மல், நன்மங்கலத்தில் தலா 3 கல்குவாரிகள் உள்பட 31 கல்குவாரிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

முதல் கட்டமாக குவாரிகளில் இருந்து எடுக்கப்படும் குடிநீர் பயன்பாட்டுக்கு உகந்தது தானா? என ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் மாங்காடு அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரியில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் குடிநீருக்கு உகந்தது என்று ஆய்வில் தெரியவந்தது.

அதன்படி விரைவில் இங்கிருந்து எடுக்கப்படும் தண்ணீரை பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து  சென்னை மக்களின் தண்ணீர் தேவையை சமாளிக்க, மாங்காடு பகுதிகளில் உள்ள 22 குவாரிகளில் தண்ணீர் எடுத்துவந்து, நாளை முதல் சென்னை நகரில்  குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இதன்மூலம் நாளை முதல் சுமார் 30 மில்லியன் லிட்டர் தண்ணீர் நாள்தோறும் சென்னைக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னையில் 6 லட்சத்து 73 ஆயிரத்து 339 வீடுகளுக்கும், 24 ஆயிரத்து 712 தெரு குழாய்களுக்கும் வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகள் மூலம் 830 மில்லியன் லிட்டர் தண்ணீர் தினசரி வினியோகம் செய்யப்பட வேண்டும்.

தற்போது ஏரிகளில் உள்ள  நீர்மட்டம் காரணமாக 550 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதுதவிர நெய்வேலி சுரங்கத்தில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து தினசரி 45 முதல் 70 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.

இவை நெய்வேலியை அடுத்து உள்ள வடகூத்தூரில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்டு, வீராணம் குடிநீர் குழாய்கள் மூலம் கொண்டு வரப்படுகிறது.

இதுதவிர திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 300 விவசாய கிணறுகளில் இருந்து தினசரி 45 முதல் 70 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.

மாமல்லபுரம் செல்லும் சாலையில் உள்ள நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக மாற்றும் நிலையம் செயல்பட்டு வருகிறது.

இங்கிருந்து தினசரி 100 மில்லியன் லிட்டர் கடல் நீர் குடிநீராக மாற்றப்பட்டு தென்சென்னை பகுதியில் உள்ள அடையாறு, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.

தற்போது மாங்காடு அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள கல் குவாரியில் இருந்து தினமும் 30 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.